விருதுநகரில் மூத்த வாக்காளர்களுக்கு சால்வை அணிவித்து ஆட்சியர் மரியாதை
1 min read
Collector honors senior voters in Virudhunagar by donning shawls
20.3.2026
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள விருட்சம் மகளிர் முதியோர் இல்லத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி, அதிகமுறை ஜனநாயக கடமையாற்றிய மூத்த வாக்காளர்களை கௌரவப்படுத்தும் விதமாக, மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா ”என் வாக்கு, என் குரல்” ”என் வாக்கு, என் உரிமை” என்ற வாசகங்கள் அடங்கிய சால்வையினை அணிவித்து கவுரவப்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
இந்த மாவட்டத்தில் உள்ள 85 வயது பூர்த்தியடைந்த மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் வாக்குச்சாவடி மையங்களுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே தபால் ஓட்டு மூலம் தங்களது வாக்கினை செலுத்திடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதனை, பயன்படுத்தி 100 சதவீதம் வாக்குப்பதிவினை உறுதி செய்திடவேண்டும்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 14,97,417 வாக்காளர்களில், 80 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் 1,018 பேரும், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் 1,304 பேரும், சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் 1,019 பேரும், சிவகாசி சட்டமன்ற தொகுதியில் 809 பேரும், விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் 1,089 பேரும், அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 1432 வாக்காளர்களும், திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் 1,134 வாக்காளர்களும் என மொத்தம் 7,805 மூத்த வாக்காளர்கள் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூகநல அலுவலர் திருமதி.திலகம், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், மூத்த வாக்காளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.