நெல்லையப்பர் கோவிலில் 22-ந்தேதி பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்
1 min read
Flag hoisting ceremony for the Panguni Uttara festival on the 22nd at Nellaiappar Temple
20.3.2026
திருநெல்வேலியில் உள்ள புகழ்பெற்ற நெல்லையப்பர் கோவிலில் வரும் 22-ந்தேதி பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் வெங்கடேஸ்வரன் வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
நெல்லை டவுன் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவில் பங்குனி உத்திர திருவிழா வருகிற 22 ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணி அளவில் கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. 4 வது திருநாளான 25ந்தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு வேணுவனநாதர் தோன்றிய வரலாறு வாசித்தல் நிகழ்வும், இரவு 7 மணிக்கு சுவாமி, அம்பாள் பஞ் சமூர்த்தியுடன் வீதி உலாவும் நடைபெற உள்ளது.
பங்குனி உத்திரம் 10ம் திருநாளான 31ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 6.30 மணிக்கு அம்பாள் சன்னதி ஆயிரங்கால் மண்டபத்தில் பங்குனி உத்திரம் செங்கோல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்த பங்குனி உத்திர திருவிழாவில் மற்றொரு சிறப்பு பூஜையும் நடைபெறுவது வழக்கம் ஆகும். அதாவது, தெய்வத் திருமணங்கள் பங்குனி உத்திரத்தன்று நடைபெறுவதாக நம்பிக்கை உள்ளது. குறிப்பாக பரமசிவன்பார்வதி திருமணம் பங்குனி உத்திரம் அன்று நடைபெற்றது. எமனிடம் இருந்து கணவனை மீட்க போராடி அதில் வெற்றி பெற்று தீர்க்க சுமங்கலியாய் வாழ்ந்த சாவித்திரி கடைபிடித்த காரடையான் நோன்பு கடைபிடிக்கப்படுவதும் இந்த பங்குனி மாதத்தில்தான்.
தன் பக்தனுக்கு எமபயம் ஒழித்து முக்தி அளித்து மிருத்யுஞ்சய மூர்த்தியாய் நெல்லையப்பர் அருள் செய்யும் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலிலும் பெண்கள் தீர்க்க சுமங்கலியாய் வாழ காண பங்குனி மாதத்தில் உடையவர் லிங்க வழிபாடு முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.
பெரிய சிவன் கோவில்களில் பரார்த்த பூஜா மூர்த்தியான மூலவர் உறையும் கருவறைக்குள் ஆத்மார்த்த பூஜைக்கென்று சிறிய லிங்கங்கள் வைக்கப் கப்பட்டு பூஜை செய்யப்படுவது வழக்கம் ஆகும்.
பண்டைய மன்னர்களால் பூஜிக்கப்பட்ட இந்த லிங்கங்கள் மீது சொத்துகளை எழுதி வைத்துள்ளனர்.
அந்த சொத்துக்கள் அனைத்துக்கும் இந்த லிங்கங்களே உடையவர் என்பதால், உடையவர் லிங்கம்’ என்று அழைக்கப்படுகிறது.
நெல்லையப்பர் கோவிலிலும் ஆத்மார்த்த பூஜைக்கென்று லிங்கம், கருவறைக்குள் இருந்து வெளியே வந்து இந்த பங்குனி உத்திர திருவிழா காலத்தில் காட்சி அளிக்கிறார். அதாவது 2வது திருநாளில் இருந்து 9ம் திருநாள வரை தினமும் மாலை 6.30 மணி அளவில் இந்த கோவிலில் உற்சவர்கள் வைக்கப்பட்டிருக்கும் உற்சவர் மண்டபத்தில் வைத்து இந்த உடையவர் லிங்கத்துக்கு அபிஷேக, ஆராதனை ஆராதனைகள் நடைபெறுகின்றன. இந்த அபிஷேகத்தை காணும் பெண்கள் தீர்க்க சுமங்கலியாய் நீண்ட காலம் வாழ்வார்கள் என்ற ஐதீகம் நிலவுகிறது.