கடையம்: வேன்-லாரி மோதியதில் 8 பேர் காயம்
1 min read
Kadayam: 8 injured in van-lorry collision
20.3.2026
தென்காசி மாவட்டம்,கடையம் பகுதியில் வேனும் டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் எட்டு பேர் காயமடைந்தனர்.
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகில் திருவெட்டநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு வேனில் பாபநாசம் சென்று கொண்டிருந்தனர் நேற்று காலை 10 மணியளவில் கடையம் சீவலப்பேரியான் கோயில் அருகிலுள்ள வளைவில் வேன் மற்றொரு வாகனத்தை முந்த முயன்றபோது எதிரில் கல்குவாரியிலிருந்து குண்டுக் கற்கள் ஏற்றி வந்த டிப்பர் லாரி மீது மோதியது. இதில் வேனில் பயணித்த முத்துசாமி (வயது 54), வேல்சாமி (வயது 64), பலவேசமுத்து (வயது 44), கண்ணன் (வயது 67), பாண்டியன் (வயது 46), மல்லிகா (வயது 43), சுதீப் மாதேஷ் (வயது 8), சிவராமகிருஷ்ணன் (வயது 9) ஆகிய எட்டு பேர் காயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடையம் காவல் உதவி ஆய்வாளர் மாடசாமி மற்றும் காவலர்கள் காயமடைந்தவர் ளை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து கடையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாடசாமி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
கடையம் நகருக்குள் குறுகிய சாலையில் அதிவேகமாக செல்லும் மணல் மற்றும் கற்களை அள்ளிச் செல்லும் டிப்பர் லாரி போன்ற கனரக வாகனங்கள் காலை மற்றும் மாலை நேரத்தில் பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் செல்பவர்களுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. எனவே, இந்த கனரக வாகனங்கள் இயக்குவதற்கு நேரக் கட்டுப்பாடு விதியை நடைமுறைப்படுத்தவேண்டுமென பொதுமக்கள் நீண்டகாலமாக கோரி வருகின்றனர்.
-ஜேசப், நிருபர்