புளியங்குடி பள்ளி வளாகத்தில் கார் மோதியதில் சிறுமி பலி-மறியல்
1 min read
4-year-old girl dies after being hit by car in Puliyangudi school premises
25.3.2026
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் கார் மோதியதில் 4 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் சுமார் 24 மணி நேரம் தேசிய நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இந்நிலையில் மாவட்டக் காவல்துறையினர் நடத்திய பேச்சு வார்த்தையின் முடிவில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது போக்குவரத்து சீரானது.
புளியங்குடி பகுதியில் செயல்பட்டு வரும் கண்ணா மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். அருகிலுள்ள நெற்கட்டான் செவல் கிராமத்தை சேர்ந்த மாரிச்சாமி – வேல்மயில் தம்பதியினரின் 4 வயது மகள் சிவயாழினி அப்பள்ளியில் படித்து வந்தார்.
திங்கட்கிழமை பிற்பகல், பள்ளி வளாகத்தில் இருந்த சிறுமி கழிவறைக்கு சென்று திரும்பும் போது, மது போதையில் காரை ஓட்டிய ராம் காந்த் என்பவர் தவறுதலாக ஆக்சிலரேட்டரை அழுத்தியதால் கார் வேகமாக பின்சென்று சிறுமி மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சிறுமி உயிரிழந்தார்.
சம்பவத்துக்குப் பிறகு காரில் இருந்தவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. சிறுமியை பள்ளி நிர்வாகத்தினர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், மருத்துவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தினார்.
இச்சம்பவம் குறித்து உடனடியாக பெற்றோருக்கு தகவல் தெரிவிக்காததுடன், சம்பவத்திற்கான சிசிடிவி காட்சிகள் மற்றும் தடயங்களை அழிக்க முயன்றதாக பள்ளி நிர்வாகம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மாலை நேரத்தில் பள்ளி வாகனத்தில் குழந்தை வராததை அறிந்த தாய் அதிர்ச்சி அடைந்து கதறியதால், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் நூற்றுக்கணக்கானோர் பள்ளி முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் கொல்லம் – திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் தென்காசி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது தென்காசியில் இருந்து மதுரை செல்லும் பஸ்கள் இலத்தூர். விலக்கு ரவுண்டானா ஆய்க்குடி சாம்பவர் வடகரை, சுரண்டை, ராஜபாளையம் வழியாக மதுரைக்குச் சென்றது இதை போல் மதுரையில் இருந்து வரும் பஸ்கள் ராஜபாளையம் சுரண்டை சாம்பவர் வடகரை இலத்தூர் விளக்கு வழியாக தென்காசிக்கு சென்றது.
இதனால் பல கிலோமீட்டர் தூரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல்துறை அதிகாரிகள் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியபோதும், போராட்டம் கலைக்கப்படவில்லை.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.எஸ்.மாதவன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்னர், விபத்தை ஏற்படுத்திய ராம் காந்த் மற்றும் செந்தில் ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
ஆயினும், பள்ளி நிர்வாகத்தினரின் தொடர்பு குறித்த சந்தேகத்தை முன்வைத்து பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திங்கட்கிழமை மாலை தொடங்கிய போராட்டம் இரவு முழுவதும் நீடித்து, மறுநாள் மாலை வரை தொடர்ந்தது.
இந்நிலையில் தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜி எஸ் மாதவன் தலைமையில், காவல்துறை ஆய்வாளர்கள் க.ஆடிவேல், சுரேஷ்குமார், மகேஷ் குமார், வழக்கறிஞர் குற்றாலம் கே.பி.குமார் பாண்டியன் ஆகியோர் பாதிக்கப்பட்ட பெற்றோர் மற்றும் அவர்களது உறவினர்களிடம் சமாதான பேச்சு வர்த்தை நடத்தினார்கள்.
இறுதியில், பள்ளி நிர்வாகம் தவறை ஒப்புக்கொண்டு இழப்பீடு வழங்க சம்மதித்ததுடன், பெற்றோர் மற்றும் உறவினர்கள் முன்வைத்த கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, சுமார் 24 மணி நேரத்திற்கு பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.
சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி நடைபெற்ற இந்த நீண்ட நேர மறியல் போராட்டம் தமிழகமெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..