June 17, 2026

Seithi Saral

Tamil News Channel

பசியில்லா தமிழகம் மூலமாக மனநலம் பாதிக்கப்பட்ட தாயை பராமரிக்கும் மாணவிக்கு உதவி

1 min read

Help for a student caring for her mentally ill mother through Hungerless Tamil Nadu

25.3.2026
மனநலம் பாதிக்கப்பட்ட தாயை பராமரிக்கும் 9ம் வகுப்பு அரசு பள்ளி மாணவிக்கு நிதி உதவி வேண்டி பசியில்லா தமிழகம் அறக்கட்டளை சமூக வலைத்தளம் மூலமாக பதிவிட்டு இருந்தனர். பல்வேறு மக்களின் உதவியின் மூலமாக முதற்கட்டமாக ரூபாய் 25,000 நிதி உதவியாக தென்காசி நகர் மன்ற தலைவர் திரு சாதிர் அவர்கள் மூலமாக மாணவிக்கு வழங்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் பகுதியைச் சார்ந்த ஒரு ஏழை தந்தை சிறுநீரகப் பிரச்சினையால் இறந்து விட, கணவரை இழந்த மனைவியோ இருதய அறுவை சிகிச்சை செய்த பின் மனநலம் பாதிக்கப்படுகிறார்.

மனநலம் பாதிக்கப்பட்ட தன் தாயை தோளில் சுமப்பது மட்டுமல்லாமல், தன் குடும்பத்தையே தோளில் சுமந்து கொண்டிருக்கிறாள் அந்த மாணவி.

தினமும் அதிகாலை 5 மணிக்கு எழுந்து தன் தாயைக் குளிக்க வைத்து, காலைக்கடன்களை சுத்தம் செய்து, அன்றைய சமையல் வேலையை முடித்து, தாய்க்கு உணவை ஊட்டி விட்டு, சமைத்த உணவை தானும் எடுத்துக் கொண்டு காலையில் பள்ளி சென்று, மாலையில் வீடு திரும்பி மீண்டும் தாய்க்கான பணிவிடைகளை செய்து வருகிறார்.

இரவில் அனைவரும் உறங்கிய பின் தனக்கான பள்ளி பாடத்தை முடித்து, 5 நாட்கள் பள்ளி வகுப்பிலும், சனி ஞாயிறு நாட்களில் காட்டு வேலைக்குச் சென்று, அதில் கிடைக்கும் சொர்ப்ப வருமானத்தில் அடுத்த வாரம் முழுவதும் தன் குடும்பத்தை நடத்த வேண்டிய சூழ்நிலை.

இந்த சூழ்நிலையில் உஷாராணி அவர்களது கல்விக்காகவும், அவரது தாயின் மருத்துவ செலவிற்காகவும் பசியில்லா தமிழகம் மூலமாக நிதி உதவி வழங்கப்பட்டது. நிதி உதவியை தென்காசி நகர் மன்ற தலைவர் திரு சாதிர் அவர்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு அவர்களது பொற்கரங்களால் வழங்கினார்கள்.

ஏழை குடும்பத்தின் துயர் துடைக்க அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய தென்காசி நகர் மன்ற தலைவர் மற்றும் பசியில்லா தமிழகம் குழுவினருக்கு அந்த பகுதி மக்கள் கண்ணீர் மல்க நன்றி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *