தமிழகத்தில் பாஜகவை வீழ்த்த அதிமுக – திமுக ஒப்பந்தம் : சீமான் பேச்சு
1 min read
AIADMK-DMK agreement to defeat BJP in Tamil Nadu: Seeman’s speech
26.3.2026
தமிழகத்தில் பா.ஜ.,வை வீழ்த்த, அ.தி.மு.க., – தி.மு.க., இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தமிழகம் முழுதும் சீமான் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். சேலம் மாவட்டத்தில் சேலம் மேற்கு, ஓமலுார், மேட்டூர் உள்ளிட்ட தொகுதிகளில் அவர் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:எங்கெல்லாம், தி.மு.க., அமைச்சர்கள், வேட்பாளர்களாக களம் காண இருக்கின்றனரோ, அங்கெல்லாம் அ.தி.மு.க.,வின் கூட்டணி கட்சியான, பா.ஜ., களம் காண்கிறது. அதாவது, தமிழகத்தில் பா.ஜ., வரக்கூடாது என, இரு கட்சிகளும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளனர். அ.தி.மு.க., ஆட்சியில், தி.மு.க.,வினர் மதுபான ஆலையில் இருந்தும்; தி.மு.க., ஆட்சியில், அ.தி.மு.க.,வினர் மதுபான ஆலையில் இருந்தும் மது வரும். இருவருக்கும் இடையே கமிஷன் உள்ளது.மதவாத கட்சி ஒழிய வேண்டும் என, அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் கூறுகின்றனர். அப்படி என்றால், காங்கிரஸ் வரலாமா? எதை வைத்து காங்கிரசை புனிதப்படுத்துகின்றனர்? அக்கட்சியால் தான் நாடு நாசமாக போய் விட்டது. தமிழத்துக்கு காவிரி நீரை தர, கர்நாடக காங்கிரஸ் அரசு மறுக்கிறது. அதே, காங்கிரசுக்கு 28 தொகுதிகளை தி.மு.க., ஒதுக்கியது வேதனை.
தேர்தலில், கட்சியினர் பணம் கொடுப்பது, தொழிலதிபர் முதலீடு செய்வது போலத்தான், லாபமாக பறித்துக் கொள்வர். இலவசம் கொடுத்து மக்களை பிச்சைக்காரர்களாக மாற்றி விட்டனர். சந்தன மரம், யானை தந்தத்தை வெட்டி கடத்திய வீரப்பனை குற்றவாளி என்பதால், கொன்றோம் என்கின்றனர். அப்படி என்றால், அவற்றை வாங்கியவர்கள் யார், அவர்களும் குற்றவாளிகள் தானே? இவ்வாறு அவர் பேசினார்.
பிரசாரத்தின்போது, ஒரு குழந்தைக்கு, ‘செந்தமிழ் வீரப்பன்’ என சீமான் பெயர் சூட்டினார்.