June 17, 2026

Seithi Saral

Tamil News Channel

சவாலான தருணங்களை இந்தியா எதிர்கொண்டு வருகிறது- பிரதமர் மோடி பேச்சு

1 min read

India is facing challenging times – Prime Minister Modi’s speech

29.3.2026
பிரதமர் மோடி வானொலி வழியே நாட்டு மக்களுடன் உரையாடும் மன் கி பாத் நிகழ்ச்சி இன்று காலை 11 மணியளவில் பேசினார். மேற்காசிய போரை நேரிடையாக அல்லாமல் மறைமுகமாக சுட்டி காட்டி பேசினார். அவர் கூறியதாவது:-
உலக அளவில் இந்த மார்ச் மாதம் பல நிகழ்வுகளை பார்த்துள்ளது. கடந்த காலத்தில் கொரோனா பெருந்தொற்றால் ஒட்டுமொத்த உலகமும் நீண்ட காலத்திற்கு எண்ணற்ற சிக்கல்களை எதிர்கொண்டது என்பது நம் அனைவரின் நினைவிலும் இருக்கும்.

கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னர் புதிய தொடக்கத்துடன் உலகம் முன்னேற்ற பாதையை நோக்கி பயணிக்கும் என நாம் எதிர்பார்த்தோம். ஆனால், உலகின் வெவ்வேறு பகுதிகளில் போர் சூழல் மற்றும் மோதல் தொடர்ந்து நிலவி வருகிறது. நம் அண்டை பகுதிகளில் ஒரு மாதத்திற்கும் மேலாக கொடூர போர் ஒன்று நடந்து வருகிறது. இந்த நாடுகளில் நம்முடைய குடும்பங்களின் லட்சக்கணக்கான சொந்தங்கள் வசித்து வருகின்றனர். அதிலும் வளைகுடா நாடுகளில் வேலை செய்தும் வருகின்றனர்.

அந்த பகுதிகளில் வசிக்கும் 1 கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்ததற்காக வளைகுடா நாடுகளுக்கு நான் நன்றிகடன் பட்டுள்ளேன். போர் நடந்து வரும் அந்த பகுதியே நம்முடைய எரிசக்தி தேவைக்கான முக்கியதொரு மையம் ஆக உள்ளது. இதனால், உலக அளவில் பெட்ரோல், டீசல் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது என்றார்.

சர்வதேச உறவுகள், வெவ்வேறு நாடுகளிடம் இருந்து கிடைக்கும் உதவி, கடந்த தசாப்தத்தில் நாடு கட்டமைத்த திறமை ஆகியவற்றால், இந்த சவால்களை இந்தியா உறுதியுடன் எதிர்கொண்டு வருகிறது. சந்தேகமேயின்றி இது ஒரு சவாலான நேரம். நாட்டு மக்கள் ஒன்றுபட்டு இந்த சவாலை எதிர்கொண்டு வெல்வோம் என்று மன் கி பாத் நிகழ்ச்சியின் வழியே, நான் இன்று மீண்டும் வலியுறுத்துகிறேன் என்று அவர் பேசியுள்ளார்.
மேலும் அவர் பேசியதாவது:-

நாட்டின் பல பகுதிகளில் கோடை காலம் தொடங்கி விட்டது. அதற்கு அர்த்தம், நீரை பாதுகாக்க நாம் மீண்டும் உறுதியெடுத்து கொள்ள வேண்டிய நேரம் இது. கடந்த 11 ஆண்டுகளில், நீர் பாதுகாப்பு பிரசாரம் மக்களிடையே குறிப்பிடத்தக்க விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இந்த பிரசாரத்தின் மூலம், 50 லட்சம் செயற்கை நீர் சேகரிப்பு கட்டமைப்புகள் நாடு முழுவதும் கட்டமைக்கப்பட்டு உள்ளன. இந்த தண்ணீர் நெருக்கடியை எதிர்கொள்ள ஒவ்வொரு கிராமத்தின் சமூக அளவிலும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்த முயற்சிகளை கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். அம்ரித் சரோவர் பிரசாரத்தின் கீழ், நாடு முழுவதும் இதுபோன்ற 70 ஆயிரம் நீர்நிலைகள் உருவாக்கப்பட்டு உள்ளன.

இவ்வாற அவர் பேசினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *