‘விஜய்க்கு பாதுகாப்பு வேண்டும்’ – மணிப்பூர் ஆளுநருக்கு த.வெ.க. கடிதம்!
1 min read
‘Vijay needs protection’ – T.R.C. letter to Manipur Governor!
1.4.2026
நடிகர் விஜய் கட்சித் தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. மூன்றாம் ஆண்டில் அடியெடுத்தும் வைத்து, சட்டமன்ற தேர்தலையும் சந்திக்க உள்ளனர்.
ஆனால் தற்போதுவரை மக்களை சென்று சந்திக்கவில்லை என்று விஜய்மீது மற்ற அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். கரூர் சம்பவத்தில்கூட இறந்தவர்களை சென்று பார்க்கவில்லை.
இதற்கு தவெக தரப்பில் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், முக்கியமாக கூறப்படும் காரணம் பாதுகாப்பு. அதாவது, விஜய் ஒரு இடத்திற்கு சென்றால் அங்கு கூட்டம் அதிகமாகும். இதனால் விஜய் மற்றும் பொதுமக்கள் என இருதரப்பினருக்கும் ஆபத்து ஏற்படும் எனக் கூறுகின்றனர்.
தற்போது வில்லிவாக்கம், அண்ணாநகர் தேர்தல் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டதற்கும் பாதுகாப்பு குறைபாடு காரணத்தையே தவெகவினர் முன்வைக்கின்றனர். இந்நிலையில் விஜய்க்கு பாதுகாப்புக்கோரி உள்துறை அமைச்சகத்திற்கு அக்கட்சி நிர்வாகி நிர்மல் குமார் கடிதம் எழுதியுள்ளார்.
அதாவது விஜய்யின் பிரச்சாரக் கூட்டங்களுக்கு காவல்துறையிடம் அனுமதி பெற்றாலும் முறையான பாதுகாப்பு வழங்கப்படுவதில்லை என்றும், விஜய்க்கு அளிக்கப்பட்டுள்ள ஒய் பிரிவு பாதுகாப்பிலும் குறைபாடு இருப்பதாகவும், கொளத்தூர் தொகுதியில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ளும்போது போலீசார் முறையான பாதுகாப்பு அளிக்கவில்லை எனவும் அந்த புகார் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கூட்ட நெரிசலால் விஜய் மக்களை காணமுடியவில்லை எனவும், தங்களுக்கு இருந்த பல்வேறு இடையூறுகளை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இக்கடிதம் உள்துறை அமைச்சருக்கும், உள்துறை செயலாளருக்கும் எழுதப்பட்டுள்ளது. தற்போதைய உள்துறை செயலாளராக கோவிந்த் மோகன் இருக்கும் நிலையில், தவெக தரப்பில் மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லாவிற்கு எழுதப்பட்டுள்ளது. அஜய் குமார் பல்லா இவர் ஆகஸ்ட் 2019 முதல் ஆகஸ்ட் 2024 வரை இந்தியாவின் உள்துறைச் செயலாளராகப் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.