காங்கிரஸ் நிர்வாகியை வேட்பாளராக அறிவித்த திருமாவளவன்
1 min read
Thirumavalavan announces Congress executive as candidate
4/4/2026
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரை, தனக்கு பதிலாக வேட்பாளராக திருமாவளவன் அறிவித்திருப்பது விசிகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாநில அரசியலில் கவனம் செலுத்துவதற்காக, சட்டசபை தேர்தலில் போட்டியிட முடிவெடுத்து, காட்டுமன்னார் கோவில் தொகுதியில் களமிறங்குவதாக விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்திருந்தார். இந்த நிலையில், திடீரென தனது முடிவை மாற்றிய அவர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மறைந்த தலைவர் இளையபெருமாள் மகன் ஜோதிமணியை வேட்பாளராக அறிவித்தார்.
இந்த நிலையில், திருமாவளவன் அறிவித்த வேட்பாளர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. காட்டுமன்னார் கோவில் தொகுதியில் போட்டியிடுவது குறித்து யாரும் தன்னிடம் கேட்கவில்லை என்று ஜோதிமணி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அவர் கூறியதாவது; திடீரென்று தான் எனக்கு தகவல் வந்தது. என்கிட்ட யாரும் வந்து கேட்கவில்லை. இந்தத் தொகுதியில் போட்டியிடுவதற்காக காங்கிரசில் விருப்பமனு கொடுத்திருந்தேன். இப்போது, திடீரென திருமாவளவன் அறிவித்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்று அவரிடம் ஆலோசித்து நடப்பேன்.
நான் இப்போது காங்கிரசில் தான் இருக்கிறேன். ஆரம்ப காலத்தில் இருந்து காங்கிரசில் தான் இருக்கிறேன். இடையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சென்று விட்டு, மீண்டும் காங்கிரசுக்கே வந்து விட்டேன். காங்கிரஸ், விசிக கூட்டணியில் இருக்கின்றன. ஒருவேளை எனக்காக விட்டுக் கொடுங்க என்று விசிகவிடம் காங்கிரஸ் கேட்டிருக்கலாம். தலைவர்கள் எடுக்கும் முடிவில் இந்தத் தொகுதி எனக்கு கிடைத்திருக்கலாம். திருமாவளவன் கொடுத்து அவருடைய சின்னத்தில் நிற்க வைக்கிறார்களா? அல்லது காங்கிரஸ் சின்னத்தில் நிற்க வைக்கிறார்களா? என்பது குறித்து எங்கள் தலைவரும், திருமாவளவனும் கலந்துபேசி, என்ன முடிவு ஏற்று, அதனை செய்வேன், இவ்வாறு அவர் கூறினார்.
திருமாவளவனின் இந்த முடிவு விசிகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே விசிக எம்எல்ஏக்களாக இருக்கும் 3 பேருக்கு வாய்ப்பு கொடுக்காதது பற்றி பேசிய திருமாவளவன், ‘சமூக நீதி பார்வை தான் காரணம். கட்சியில் இருக்கும் பிறருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற நோக்கம் தான்,’ என்று கூறினார். ஆனால், விசிகவில் இருப்பவர்களுக்கு வாய்ப்பளிக்காமல், இப்படி கட்சியில் இல்லாத ஒருவரை வேட்பாளராக அறிவித்து இருப்பது அவரது கட்சியினரிடையே முனுமுனுப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருக்காக தன்னுடைய தொகுதியை திருமாவளவன் விட்டுக்கொடுத்தது ஏன்? இதன் பின்னணியில் ஏதேனும் அழுத்தம் இருக்குமா? என்ற கேள்வியும், சந்தேகமும் எழுந்துள்ளன.
இதற்கிடையே இன்று மாலை பேட்டி அளித்த திருமாவளவன் கூறியதாவது:-
” முந்தைய ஒரு தேர்தலின் போது சமயநல்லூர் தொகுதியை திமுகவிடம் கேட்டு பெற்றேன். அந்த தொகுதியில் மறைந்த தலைவர் கக்கன் வாரிசை தேர்தலில் நிறுத்தினேன். அவர் எங்கள் கட்சியை சேர்ந்தவர் அல்ல, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இருந்தாலும் அந்த குடும்பத்தை கவுரவிக்க வேண்டும் என்ற நோக்கில் வாய்ப்பு கொடுத்தேன். அதே போல, மறைந்த தலைவர் இளைய பெருமாள் குடும்பத்தை கவுரவிக்கும் வகையில் அவரது மகனுக்கு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கிறேன்,” இவ்வாறு அவர் கூறினார்.
எனினும் திருமாவளவன் எடுத்த இந்த முடிவு அவரது கட்சியினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.