June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

ஆலங்குளம் அருகே கள் இறக்கியவரை சுட்டுபிடித்த சப்-இன்ஸ்பெக்டர்

1 min read

Sub-inspector shoots dead gunman near Alankulam

7.4.2026
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூர் கிராமம். அந்த ஊரைச் சேர்ந்தவர் மணிகண்டன், பனை ஏறும் தொழிலாளி, தற்போது பதநீர் சீசன் என்பதால் பதநீர் இறக்கும் பணியில் ஈடுபட்டுவந்தார்.
இவர் கள் இறக்கி வியாபாரம் செய்ததாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதனை அடுத்து ஆலங்குளம் உதவி ஆய்வாளர்(சப்-இன்ஸ்பெக்டர்) இசக்கி ராஜா விசாரணை நடத்தச் சென்றுள்ளார்.

அப்போது மணிகண்டன் பனை மட்டையை எடுத்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தற்காப்புக்காக துப்பாக்கியால் மணிகண்டனின் காலில் சுட்டுள்ளார். இதில் 2 கால்களிலும் 2 குண்டுகள் பாய்ந்தது.

இதில் காயம் அடைந்த மணிகண்டன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி ராஜா இருவரும் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இது குறித்து தகவல் அறிந்த ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்து இரத்தம் வடிந்த நிலையில் இரண்டு பேரையும் மீட்டு போலீசார் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து தகவல் அறிந்த மணிகண்டனின் உறவினர்கள் ஆலங்குளம் காமராஜர் சிலை முன்பு திரண்டு மறியல் செய்ய முயன்றனர். அப்போது அவர்கள் கள் இறக்கியதாக கூறி விவசாயி மணிகண்டனை சப்-இன்ஸ்பெக்டர் கொடூரமாக தாக்கி கொலை செய்யும் நோக்கத்தில் துப்பாக்கியால் சுட்டு உள்ளார். இதனால் அவரது 2 கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டு அவரது குடும்பம் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறது. எனவே உடனடியாக போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது சம்பவ இடத்திற்கு வந்த ஆலங்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஆடிவேல் மற்றும் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *