ஆழ்வார்குறிச்சி ஆசிரியர் மாடசாமியின் சிறுகதைக்கு பரிசு
1 min read
Prize for short story by Azhwar Kurichi Asian Madasamy
8.4.2026
ஆழ்வார்குறிச்சி ஆசிரியர் ஆழ்வை ஆயில்யன் என்ற மாடசாமி அவர்கள் எழுதிய சிறுகதைக்கு கலைமகள் மாத இதழ் பரிசு வழங்கியது.
ஆழ்வார்க்குறிச்சி பரமகல்யாணி மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தவர் மாடசாமி. பணிநிறைவு பெற்ற இவர் நிறைய சிறுகதைகள், நாவல்கள் எழுதியுள்ளார்.
இயற்கை ஆர்வலரான இவருக்கு தமிழ்நாடு அரசின் மாசு கட்டுப்பாட்டு துறை சார்பில் பசுமை சாம்பியன் விருதும், தமிழ்நாடு வனத்துறை சார்பில் 2025ம் ஆண்டுக்கான இயற்கை பாதுகாப்பு முன்னோடி விருதும் வழங்கப்பட்டது-
இந்த நிலையில் கலைமகள் மாத இதழ் நடத்திய கி.வா.ஜ. சிறுகதை போட்டியில் அவருடைய “வாத்தியாரம்மா” என்ற கதைக்கு பரிசு கிடைத்தது.
“ஒன்றாம் வகுப்பு ஆசிரியை மேரி மாணவர்கள் மத்தியில் நன்மதிப்பு பெற்றவர். மாணவர்களை பிள்ளைபோல் பார்ப்பவர். ஆனால் அவருடைய ஒரே மகன் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி உடல்நலம் பாதிக்கப்பட்டார். அவரின் சிகிச்சைக்கு மேரி டீச்சரின் மாணவர்கள் உதவிசெய்தனர். மேரியின் மகன் இறந்துவிடவே அவருடைய உடலை அடக்கம் செய்ய உதவி செய்தார்கள். மகனை பரிகொடுத்த ஆசிரியையை எல்லா மாணவர்களும் தங்கள் தாயாக மதித்து அழைக்கிறார்கள்…”- இந்த கருத்துடன் கூடிய சிறுகதைக்கு பரிசு கிடைத்துள்ளது.
இதற்கான பரிசளிப்பு விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள சி.பி.ஆர். கன்வென்சன் சென்டரில் நடந்தது. இவரோடு மங்களம் என்ற கணேஷ் ராமகிருஷ்ணன், அகிலன் கண்ணன் ஆகியோருக்கும் சிறந்த சிறுகதைக்கான பரிசு வழங்கப்பட்டது.
விழாவில் கலைமகள் ஆசிரியர் கீழ ஆம்பூர் சங்கரசுப்பிரமணியன் பேசியதாவது:-
கலைமகள் இதழ் 95 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கிறது. கொரோனா காலத்தில் கூட கடவுள் அனுக்கிரகத்தால் கலைமகள் வெளிவந்தது. எழுத்தாளர் தேவிபாலா கலைமகள் குடும்பத்தைச் சேர்ந்தவர். இன்று அவர் மிகப்பெரும் உச்சத்தில் உள்ளார். அவரின் முதல் சிறுகதை எங்கள் இதழில் வெளியானது.
சிறுகதை போட்டிக்கு 172 சிறுகதைகள் வந்தன. அவற்றுள் 12 தேர்வு செய்யப்பட்டன. கதைகளை தேர்வு செய்ய சில நிபந்தனைகள் வைத்துள்ளோம்.
சிறுகதை எழுதுவதில் தேசப்பக்தி, தனித்துவம் வேண்டும். அடுத்தவர்களை கிண்டல் செய்யக்கூடாது. விறுவிறுப்பான கதைக்களம் வேண்டும்.
சிறுகதைக்கென ஓர் இலக்கணம் வேண்டும். படிக்காமல் யாரும் சிறுகதை எழுத முடியாது. நிறைய விஷயங்களை படித்தால்தான் சிறுகதை எழுத முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
எழுத்தாளர் தேவிபாலா பேசும்போது கூறியதாவது:-
நான் 20 வயதில் எழுதிய சுமங்கலி பிரார்த்தனை என்ற சிறுகதை கலைமகள் இதழில் வெளியானது. அந்த சிறுகதைக்கு கிவாஜ பாராட்டும் பரிசும் கிடைத்தது. கலைமகளில் எழுத்தும் அதற்கான வரம்பும் மிக முக்கியம். அந்தப்படிப்பினையே என் வாழ்வில் உயர காரணமாக அமைந்தது. சிறுகதை எழுதுவது ஒரு தவம். அதை சிரத்தையுடன் செய்யுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.