சியாட்டில் விவேகானந்தர் முழு உருவச் சிலை திறப்பு
1 min read
Seattle unveils full-length statue of Swami Vivekananda
12/4/2026
அமெரிக்காவின் சியாட்டில் மாநகர அரசு தனது நகரின் மையப்பகுதியான வெஸ்ட்லேக் சதுக்கத்தில் சுவாமி விவேகானந்தரின் முழு உருவச் சிலையை நிறுவியுள்ளது.
அமெரிக்காவில் ஒரு மாநகர அரசால் விவேகானந்தர் சிலை நிறுவப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்தச் சிலையை சியாட்டில் மேயர் கேட்டி வில்சன், சியாட்டிலுக்கான இந்தியத் தூதர் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.
வெஸ்ட்லேக் சதுக்கத்தில் நாளொன்றுக்கு சுமார் 4 லட்சம் மக்கள் வந்து செல்வர். அமேசான் தலைமையகம், சியாட்டில் மாநாட்டு மையம் மற்றும் மோனோரயில் நிலையம் போன்ற முக்கிய இடங்களுக்கு மிக அருகில் இந்தச் சிலை அமைந்துள்ளது.
இதனால் ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் விவேகானந்தரின் திருவுருவத்தைக் காணும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய கலாசார உறவுகளுக்கான கவுன்சில் இந்த சிலையை சியாட்டில் நகரத்திற்குப் பரிசாக வழங்கியது. சுவாமி விவேகானந்தர் சிலையை இந்திய சிற்பி நரேஷ் குமார் குமாவத் செதுக்கினார்.
உலகளாவிய அமைதி மற்றும் சகோதரத்துவத்திற்கு இந்தியா அளிக்கும் முக்கியத்துவத்தை இந்த விவேகானந்தர் சிலை மீண்டும் ஒருமுறை பறைசாற்றியுள்ளது. இந்திய-அமெரிக்க உறவில் இந்த நிகழ்வு ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது.