June 12, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழ்நாடு முழுவதும் நாளை கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

1 min read

Black flag protest across Tamil Nadu tomorrow: MK Stalin’s announcement

15.4.2026
அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படுகின்றன. இந்த நோக்கில் அரசியலமைப்பு சட்டம் 131-வது திருத்த மசோதா-2026, தொகுதிகள் மறுவரையறை மசோதா-2026 மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டங்கள் திருத்த மசோதா-2026 ஆகிய 3 மசோதாக்களை மத்திய அரசு முன் மொழிந்து உள்ளது.

இந்த மசோதாக்கள் நாளை (வியாழக்கிழமை) கூட உள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளன. இதையொட்டி நேற்று இந்த மசோதாக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கடுமையாக எதிர்த்து உள்ளனர்.

இந்த நிலையில், தொகுதி மறுவரையறையில் தமிழ்நாடு சந்திக்கவுள்ள பாதிப்புகள் குறித்து விவாதிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் தொகுதி மறுவரையறையை எப்படி எதிர்கொள்வது என்பது தொடர்பாக முக்கிய அறிவுறுத்தல்களை மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதனை தொடர்ந்து திமுக மாவட்ட செயலாளர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

உயரட்டும் கருப்புக்கொடி! தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!

இந்தியாவின் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட குற்றத்துக்காக தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களுக்குத் தண்டனையா?. மத்திய பா.ஜ.க. அரசு நாளை நாடாளுமன்றத்தில் கொண்டுவரவுள்ள தொகுதி மறுவரையறை சட்டத்திருத்தம் தமிழ்நாட்டுக்கும், தென்மாநிலங்களுக்கும் இழைக்கப்படும் “மாபெரும் வரலாற்று அநீதி”.

விந்திய மலைக்குத் தெற்கே உள்ள தென்னிந்தியர் ஒவ்வொருவரும் கொதித்துப் போயிருக்கிறோம். நெருப்போடு விளையாடுகிறது பாஜக. தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தமிழ்நாடு முழுவதும் வீடுகளிலும், பொது இடங்களிலும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நாளை நடக்கும்.

தமிழ்நாட்டின் குரலை மதித்து மத்திய அரசு பின்வாங்கவில்லை என்றால், அதற்கான விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டி இருக்கும். இதற்காக, மிகப் பெரிய விலையை நீங்கள் கொடுக்க வேண்டி இருக்கும். தி.மு.க. தலைவராக, அனைத்துக்கும் மேல் சுயமரியாதையுள்ள தமிழனாக மீண்டும் எச்சரிக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *