த.வெ.க. சட்டமன்றக் குழுத் தலைவராக விஜய் தேர்வு
1 min read
Vijay elected as TDP legislative committee chairman
5.5.2026
தமிழக சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 23-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடந்தது. அதன் முடிவுகள் வரத் தொடங்கியதும், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அதிக வாக்குகளை பெற்று முன்னிலையில் இருந்து வந்தது.
இறுதியாக தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை. ஆனால் த.வெ.க.வுக்கு, அந்த அளவுக்கு பெரும்பான்மை இல்லை. இருந்தாலும் விஜய் ஆட்சியை அமைக்க கவர்னரிடம் உரிமை கோருவார் என்று தெரிகிறது. கவர்னரும் அதற்கு அனுமதி அளிப்பார். அதனால் விஜய் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பின்பு சட்டசபையில் குறிப்பிட்ட தினங்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.
த.வெ.க. பெரும்பான்மைக்கு கூடுதலாக 12 இடங்கள் தேவைப்படுகிறது. எனவே தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், தே.மு.தி.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ம.க. ஆகியோர் விஜய்க்கு ஆதரவு அளிப்பார்கள் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் சட்டமன்றக் குழுத் தலைவராக அக்கட்சியின் தலைவர் விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் விஜய் முதல்-அமைச்சராக ஆதரவு அளித்து அக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களிடம் உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்து பெறப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து தமிழக கவர்னர் ஆர்.வி. அர்லேகரை நாளை சந்தித்து த.வெ.க. தலைவர் விஜய் தமிழகத்தில் ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளார். இந்த சந்திப்புக்காக கவர்னரிடம் நேரம் கேட்கப்பட்டுள்ளது.