அசாம் முதல்வராக 2வது முறையாக பதவியேற்றார் ஹிமந்த பிஸ்வ சர்மா
1 min read
Himanta Biswa Sarma sworn in as Assam Chief Minister for second term
12.5.2026
வடகிழக்கு மாநிலமான அசாமின் முதல்வராக, தொடர்ந்து இரண்டாவது முறையாக, பா.ஜ.,வைச் சேர்ந்த ஹிமந்த பிஸ்வ சர்மா, 57, (மே 12) பதவியேற்றார்.
அசாமில் மொத்தமுள்ள, 126 சட்டசபை தொகுதிகளுக்கு ஏப்., 9ல் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இதில், ஆளும் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்., கூட்டணிக்கும் இடையே போட்டி நிலவியது. கடந்த 4ல் நடந்த ஓட்டு எண்ணிக்கையின் முடிவில், 102 தொகுதிகளை தே.ஜ., கூட்டணி கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது.
இதில், பா.ஜ., 82, கூட்டணி கட்சிகளான அசோம் கண பரிஷத், போடோலாந்து மக்கள் முன்னணி ஆகியவை, தலா, 10 தொகுதிகளை வென்றன. காங்., கூட்டணி வெறும், 21 இடங்களையே கைப்பற்றியது.
கட்சியின் சட்டசபை குழுத் தலைவராக, முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, குவஹாத்தியில் உள்ள கானாபாரா கால்நடை மருத்துவக் கல்லுாரி மைதானத்தில் நடந்த பிரமாண்ட விழாவில், அசாம் முதல்வராக தொடர்ந்து இரண்டாவது முறையாக ஹிமந்த பிஸ்வ சர்மா பதவியேற்றார். அவருக்கு கவர்னர் லக் ஷ்மண் பிரசாத் ஆச்சார்யா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தொடர்ந்து, பா.ஜ., – எம்.எல்.ஏ.,க்கள் ராமேஸ்வர் தெலி, அஜந்தா நியோக் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர். தவிர, அசோம் கண பரிஷத் கட்சி தலைவர் அதுல் போரா, போடோலாந்து மக்கள் முன்னணி கட்சியின் மூத்த தலைவர் சரண் போரோ ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
இதன் மூலம், அசாமில் பா.ஜ., தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது.
இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், பா.ஜ., தேசிய தலைவர் நிதின் நபின், பா.ஜ., ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்கள் பங்கேற்றனர்.
இதற்கிடையே, பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சரும், பவானிபூர்-சர்போக் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான ரஞ்சீத் குமார் தாஸ், அசாம் சட்டசபையின் புதிய சபாநாயகராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.