நெல்லை: புற காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசிய மாணவர்கள் 3 பேர் கைது
1 min read
Three arrested for throwing petrol bomb at police station near Nellai
21.5.2026
நெல்லை அருகே புறக்காவல் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசிய 10ம் வகுப்பு தேர்வு எழுதிய 3 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம், தச்சநல்லூர் அருகே ராமையன்பட்டி புறக்காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு மானூர் எஸ்ஐ சஜி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் ஒரே பைக்கில் மூன்று சிறுவர்கள் வந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது 3 பேரும் மது அருந்தியிருந்ததும், அவர்கள் 10ம் வகுப்பு தேர்வு எழுதி யுள்ளனர் என்பதும் ஓட்டுநர் உரிமம் இல்லை என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் பைக்கின் சாவியை பறித்துக்கொண்டு பெற்றோரை அழைத்து வந்தால் மட்டுமே பைக் சாவியை திரும்ப ஒப்படைப்போம் என தெரிவித்தனர். போலீசாரின் கவனம் திசை திரும்பியதும், பைக்கை மெதுவாக அங்கிருந்து உருட்டிக்கொண்டே வீட்டுக்கு சென்றுள்ளனர். பின்னர் பைக்கிலிருந்து 10 மில்லி பெட்ரோலை சிறிய பாட்டிலில் அடைத்து விட்டு மாற்றுச் சாவி மூலம் பைக்கை திறந்து, அதே பைக்கில் மூவரும் ராமையன்பட்டி புறக்காவல் நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு வந்தனர். அங்கு போலீசார் பணியில் இருந்த போது பெட்ரோல் வெடிகுண்டை சுவர்களில் எறிந்து விட்டு தப்பினர்.
இதுகுறித்து மானூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து 3 சிறுவர்களையும் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சினிமாவை பார்த்து பெட்ரோல் வெடிகுண்டுகளை தயாரித்ததாகவும், புறக்காவல் நிலையம் முன்பு வீசியதாகவும் தெரிவித்தனர். பின்னர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டனர். இதுகுறித்து நெல்லை மாவட்ட எஸ்பி பிரசண்ணகுமார் கூறுகையில், 3 சிறுவர்களுக்கும் மது வழங்கியது யார் என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறோம். அவர்கள் பிளஸ் 1 படிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை கலெக்டர் சுகுமார் மூலம் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.