July 10, 2026

Seithi Saral

Tamil News Channel

இபிஎஸ் தான் பொதுச் செயலாளர்- வேலுமணி பேட்டி

1 min read

EPS is the General Secretary – Velumani Interview

22.5.2026
எங்களுக்குள் சில கருத்து வேறுபாடுகள் மட்டுமே உள்ளன. அதிமுக பிளவுபடவில்லை, சிலர் எங்களை எதிர்மறையாக சித்தரிக்க முயற்சிக்கின்றனர் என்று அதிமுக எம்எல்ஏ எஸ்.பி. வேலுமணி கூறி உள்ளார்.
இதுகுறித்து அவரது பேட்டி;

தவெக அமைச்சரவையில் பதவி ஏற்றவர்களுக்கு எங்களின் வாழ்த்துகள். நாங்கள் அமைச்சர் பதவிகளை எதிர்பார்த்ததாக சிலர் பேசி வருகின்றனர். தவெகவிடம் நாங்கள் அமைச்சர் பதவி கேட்டதாக எங்களில் யாரேனும் எப்போதாவது கூறி இருக்கிறோமா? எதற்காக ஆதரவு என்று நாங்கள் ஏற்கனவே சொல்லி விட்டோம். ஏமாற்றம், ஏமாற்றம் என்று கூறுகின்றனர். தவெகவுக்கு ஆதரவுதான் என்று நாங்கள் தெளிவுபடுத்தினோம்.

எங்களை பொறுத்தவரை தவெக மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது. அதன் அடிப்படையில் மட்டுமே நாங்கள் எங்களின் ஆதரவை அளித்தோம். ஆனால் ஊடகங்கள், சமூக வலைதளங்களில் தவறான எண்ணங்களை பகிர்ந்து வருகின்றனர். சட்டசபையில் ஆதரவு தெரிவிக்கும்போது பதவிக்காக அதிமுகவில் இருந்து பிரிந்ததாக பரப்பி வருகின்றனர்.
அதிமுக தோல்வியை சந்தித்து இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்கிறோம். அன்றும் சரி, இப்பவும் சரி இபிஎஸ் தான் கட்சியின் பொதுச் செயலாளர். தேர்தலில் இந்த தோல்வி எப்படி வந்தது, அதை எப்படி சரி செய்வது என்பது பற்றி தான் நாங்கள் ஆய்வு செய்தோம் என்று தான் சொன்னோம்.

எங்களுக்குள் சில கருத்து வேறுபாடுகள் உள்ளனவே தவிர, அதிமுகவில் பிளவு இல்லை. சிலர் எங்களை எதிர்மறையாக சித்தரிக்க முயற்சிக்கின்றனர். நாங்கள் எந்த பதவியையும் கேட்கவில்லை. நாங்கள் திமுகவை எதிர்க்கிறோம். கட்சி அலுவலகத்தை முற்றுகையிட வேண்டும் என்ற எந்த எண்ணமும் எங்களுக்கு ஒருபோதும் இருந்ததே இல்லை.

அலுவலகத்தை கைப்பற்ற போவதாக தவறான தகவல்கள் பரவி வந்தது. அதுபோன்ற எந்த செயல்களிலும் நாங்கள் ஈடுபடவில்லை. கட்சியை வலுப்படுத்தி ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவதும் தான் எங்களின் உயிர்மூச்சு.

இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *