கடையம் போலீஸ் நிலையத்தில் தீ விபத்து- 80 பைக்குகள் எரிந்து நாசம்
1 min read
Fire accident at Kadayam Police Station – Two-wheelers destroyed by fire
22.5.2026
தென்காசி மாவட்டம், கடையம் காவல் நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 80 கும் அதிகமான இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசமானது.
தென்காசி மாவட்டம் கடையம் காவல் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 80க்கும் அதிகமான இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசமாகின.
நேற்று (22-05-2026) காலை 11.30 மணியளவில் அதிகளவில் வெப்பக் காற்று வீசிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் கடையம் காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 80 கும் அதிகமான இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசமானது.
இதனிடையே காவல் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து பற்றி அறிந்த அப்பகுதி பொதுமக்கள் தன்னெழுச்சியாக ஓடோடி வந்து டிராக்டர்களில் தண்ணீர் கொண்டு வந்து காவலர்களுடன் இணைந்து போராடி தீயை அணைக்க முற்பட்டனர்.
இதனிடையே வெப்பக் காற்று மிக வேகமாக வீசியதாலும் வழக்கத்திற்கு அதிகமாக காலநிலை சூடாக இருந்ததாலும் அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரிகள் குட்டியானை (டாடா ஏஸ்) போன்ற வாகனங்களிலும் ஆங்காங்கே தீப்பற்றி எரியத் துவங்கியது. ஏற்கனவே மளமளவென தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த இருசக்கர வாகனங்களின் பெட்ரோல் டேங்க் மூடிகள் வெடித்து சிதற ஆரம்பித்தது. ஆனாலும், பொதுமக்கள் அச்சமின்றி போராடி தீயை அணைத்து நிலைமையை ஓரளவிற்கு கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
பின்னர், மாவட்ட தீயணைப்பு அதிகாரி மணிகண்டன் தலைமையில் உதவி மாவட்ட தீயணைப்பு அதிகாரி சுரேஷ் ஆனந்த் மேற்பார்வையில் ஆலங்குளம் தீயணைப்பு நிலைய அதிகாரி விஜயன் உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எல்லா வாகனங்களின் மீதும் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்து நிலைமையை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்து குறித்து கடையும் காவல் நிலைய ஆய்வாளர் சுரேஷ் குமார் தலைமையில் உதவி ஆய்வாளர் மாடசாமி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். காவல் நிலையத்தின் உள்ளேயும் வெளியேயும் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன் நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பகுதியில் நிற்கும் மூங்கில் மரங்கள் ஒன்றோடொன்று உரசியதில் ஏற்பட்ட தீப்பொறி தரையில் கிடக்கும் காய்ந்த சருகுகளின் மீது விழுந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் எரிந்ததென காவல் நிலைய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவலறிந்த மாவட்ட கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர் சங்கர், ஆலங்குளம் உட்கோட்ட மதுவிலக்கு பிரிவு துணை கண்காணிப்பாளர் முருகேசன், பயிற்சி துணை கண்காணிப்பாளர் லோகநாதன், ஆழ்வார்குறிச்சி ஆய்வாளர் குணசேகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ விபத்தை பார்வையிட்டு தீ விபத்து ஏற்பட்டது குறித்து விசாரித்தனர்.