June 15, 2026

Seithi Saral

Tamil News Channel

நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் தீவிரமடையும்

1 min read

Heatwave to intensify across the country

24.5.2026
நாடு முழுவதும் வெப்ப அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களைக் காத்துக் கொள்வதற்காக மக்கள் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டாலும் எவ்வித பலனும் இல்லை. வழக்கத்திற்கு மாறாக வெயில் சுட்டெரிக்கிறது. பொதுவாகவே தென் இந்தியாவை விட வட இந்தியாவில் வெயிலின் தாக்கமானது அதிகமாகவே காணப்படுகிறது.

இந்தாண்டு வட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்கள் கடுமையான வெயிலின் பிடியில் சிக்கித் தவித்து வருகின்றன. அதிகபட்சமாக உத்தரப்பிரதேச மாநிலம் பாண்டாவில் 117.68 டிகிரி பாரன்ஹீட் அதாவது 47.6 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகியுள்ளது.

நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் மேலும் தீவிரமடையும். வடமேற்கு இந்தியாவில் மே 24 முதல் மே 29-ம் தேதி வரை தொடர்ச்சியான வெப்ப அலை சூழல் நிலவுக்கூடும். மத்திய இந்தியாவில் 6 நாட்களுக்கு வெப்ப அலை முதல் தீவிர வெப்ப அலை வீசும். டெல்லி இரவு நேரங்களிலும் சூடான காற்று வீசும்.

தெலுங்கானாவில் வெப்பத்தின் தாக்கத்தால் நேற்றுமுன்தினம் மட்டும் 16 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது 34 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் ஹீட் ஸ்ட்ரோக்கால் 300க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகி உள்ளன.

வெப்ப அலையின் தாக்கத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றால் அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். சோர்வின்றி இருக்க உடலை எப்போதும் நீரேற்றத்துடன் வைத்திருப்பது அவசியம். பருத்தியிலான அதாவது காட்டன் ஆடைகளை அணிய வேண்டும். மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்வதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். நீரேற்றம் நிறைந்த பழங்கள், திரவ உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். வீட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்களைக் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *