June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்டத்தில் 15 சிறந்த கலைஞர்களுக்கு கலை விருதுகள்- ஆட்சித்தலைவர் தகவல்

1 min read

Art awards for 15 best artists in Tenkasi district – Governor’s information

1.6.2026
தென்காசி மாவட்ட கலைமன்றம் வாயிலாக பதினைந்து சிறந்த கலைஞர்களுக்கு 2025-2026 ஆம் ஆண்டுக்கான கலை விருதுகள் வழங்கப்படவுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது;-

தமிழ் நாட்டின் கலைப்புலமைகளை மேம்படுத்தவும், பாதுகாக்கும் நோக்கிலும், கலைஞர்களின் கலைத்திறனை சிறப்பிக்கும் வகையிலும் கலை பண்பாட்டுத்துறையின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் செயல்படும் மாவட்டக் கலை மன்றங்களின் வாயிலாக ஒவ்வொரு மாவட்டத்திலும் 20022003ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வயது மற்றும் கலைப்புலமையின் அடிப்படையில் சிறந்த ஐந்து கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கிடவும் 20212022 முதல் சிறந்த பதினைந்து கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கிடவும் அரசு ஆணையிட்டுள்ளது.

கலைவிருதுகள், கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கி வரும் தென்காசி மாவட்டக் கலை மன்றத்தின் வாயிலாக தென்காசி மாவட்டத்தில் இயல், இசை, நாடகம் முதலிய கலைகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கலைகளில் சிறந்து விளங்கும் பதினைந்து கலைஞர்களுக்கு விருதுகள் வழங்க மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் தேர்வாளர் குழு அமைக்கப்பட்டு இத்தேர்வுக்குழு வாயிலாக விருதுக்கு விண்ணப்பிக்கும் கலைஞர்களை நேர்முகமாக அழைக்கப்பட்டு கலைவல்லுநர்களை கொண்டு கலைஞர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆகவே, தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த பாட்டு, பரதநாட்டியம், கும்மி, கோலாட்டம், மயிலாட்டம், தேவராட்டம், தோல்பாவைக்கூத்து, பொம்மலாட்டம், நையாண்டிமேளம், கரகாட்டம், காவடி, பொய்க்கால் குதிரையாட்டம், மரக்கால் ஆட்டம். கோல்கால் ஆட்டம். கழியல் ஆட்டம். கணியான் கூத்து, ஓவியம் சிற்பம், அரசன் அரசியாட்டம், புலியாட்டம், காளையாட்டம், மானாட்டம், பாம்பாட்டம், ஆழியாட்டம் கைச்சிலம்பாட்டம். சிலம்பாட்டம் (வீரக்கலை) மற்றும் வில்லிசை முதலிய செவ்வியல் கலைகள், நாட்டுப்புறக்கலைகள் அனைத்து வகை முத்தமிழ் கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

18 வயதும் அதற்குட்பட்ட கலைஞர்களுக்கு கலைஇளமணி 19 முதல் 35 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கு கலைவளர்மணி 36 முதல் 50 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கு கலைச்சுடர்மணி, 51 முதல் 65 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கு கலை நன்மணி 66 வயதிற்கு மேற்பட்ட கலைஞர்களுக்கு கலைமுதுமணி என்ற நிலைகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளன.

வயது மற்றும் கலைப்புலமையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் பதினைந்து சிறந்த கலைஞர்களுக்கு பட்டயம், பொன்னாடை மற்றும் பொற்கிழி ஈடாக கலைஇளமணி ரூ.4000/-, கலைவளர்மணி ரூ.6000/- கலைச்சுடர்மணி ரூ.10000/-, கலைநன்மணி ரூ.15000/-கலைமுதுமணி ரூ.20000/- தொகைக்கான காசோலை வழங்கி கெளரவிக்கப்படும்.

மேலும், தென்காசி மாவட்டத்தில் தேசிய விருதுகள், மாநில விருதுகள் (கலைமாமணி) மற்றும் ஏற்கனவே மாவட்டக் கலை மன்றத்தின் விருதுகளைப் பெற்ற கலைஞர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பம் செய்யக்கூடாது. மேலும் கடந்த ஆண்டுகளில் ஏற்கனவே விருதுக்கு விண்ணப்பம் செய்த கலைஞர்கள் தற்போது புதியதாக விண்ணப்பம் கண்டிப்பாக அனுப்பவேண்டும்.

இந்நிலையில், தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த தகுதி வாய்ந்த கலைஞர்கள் விருதுகள் பெறுவதற்கான விண்ணப்பத்துடன் வயதுச் சான்று, முகவரிச்சான்று மற்றும் கலை அனுபவச் சான்றுகளின் நகல்களுடன் (தொலைபேசி எண்ணுடன்) உதவி இயக்குநர், மண்டலக் கலை பண்பாட்டு மையம், 870/21, அரசு அலுவலர் ஆ குடியிருப்பு, (தொழிலாளர் வைப்பு நிதி அலுவலகம் அருகில்), திருநெல்வேலி -07. (தொலைபேசி எண்.0462-2901890) என்ற முகவரிக்கு 10 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *