June 21, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழக சட்டசபையில் இரண்டு முறை தேசிய கீதம்: கவர்னர் அர்லேகர் பெருமிதம்

1 min read

National Anthem played twice in the Tamil Nadu Assembly: Governor Arlekar expresses pride.

18.6.2026
தமிழக சட்டசபையில் இன்று தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட்டது. இதையடுத்து தேசியகீதம் இசைக்கப்பட்டது. வழக்கமாக தேசிய கீதம் இறுதியில் மட்டும் இசைக்கப்படும். ஆனால் இன்று முதலிலும் கடைசியிலும் என இருமுறை பாடப்பட்டது. அதேநேரத்தில் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்படவில்லை. ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் முதலில் பாடப்பட்டது சர்ச்சையை கிளப்பிய நிலையில், இன்று சட்டசபையில் தமிழ்த்தாய் முதலில் பாடப்பட்டது. எனினும், தேசியகீதம் இருமுறை பாடப்பட்டது விவாதப்பொருளாகியுள்ள நிலையில், கவர்னர் அர்லேகர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:

“தமிழ்நாடு சட்டமன்றத்தில் புதிய உதயம் தோன்றிய நாள் இன்று என்பதை மக்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஆளுநரின் முழு உரையும் எவ்வித இடையூறும் இன்றி, சட்டமன்றத்தில் இன்று வாசிக்கப் பெற்றது மன நிறைவைத் தருகிறது. மேலும், முதல் முறையாக சட்டசபையில் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும், ஆளுநர் உரையின் இறுதியிலும் தேசிய கீதம் பாடப்பட்ட சரித்திர நிகழ்வானது, மாநில அரசு மற்றும் மக்கள் மாளிகை இடையே இணக்கமான சூழல் நிலவ வேண்டும் என்ற தமிழக மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து, மக்களாட்சியின் மாண்பை நிலை நாட்டும் விதமாக அமைந்துள்ளது என்றால் அது மிகையல்ல.

ஜனநாயகத்தில் ஆளப்படும் ஆட்சியானது, ஒருங்கிணைந்த, இணக்கமான உறவை அனைத்து தரப்பிலும் நிலைநாட்டி, மக்களின் எதிர்பார்ப்புகளை, தேவைகளை பூர்த்தி செய்வதையே ஓர் நிலையான, முன்னுதாரணமான அரசானது தனது நோக்கமாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்ற இலக்கை நோக்கி நாம் அனைவரும் இணைந்து பயணிக்கத் தொடங்கியுள்ளோம் என்பது மனதுக்கு நிறைவைத் தருகிறது”

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *