June 22, 2026

Seithi Saral

Tamil News Channel

சபரிமலையில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த ஏ.ஐ. மேலாண் முறை

1 min read

New AI-based management system to control crowd congestion at Sabarimala

21/6/2026
பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அடிப்படையிலான பக்தர்கள் மேலாண்மை அமைப்பு அறிமுகமாகிறது.

கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். குறிப்பாக, மண்டல, மகர விளக்கு காலங்களில் அதாவது, நவ., – ஜன., வரை கூட்டம் அலைமோதும். ஒவ்வொரு ஆண்டும் பக்தர்களின் கூட்டம் அதிகரிப்பதால், நெரிசலை சமாளிப்பதற்கு திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டும், மாநில போலீசாரும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த ஆண்டு மண்டல – மகர விளக்கு காலங்களில், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், ஏ.ஐ., அடிப்படையிலான பக்தர்கள் மேலாண்மை அமைப்பை அறிமுகம் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர் ஜெயகுமார் கூறியதாவது:
கேரள உயர் நீதிமன்றத்தால் ஏற்கப்பட்ட, ‘விஷன் சபரிமலை’ என்ற விரிவான திட்டத்தின் ஒரு பகுதி தான், ஏ.ஐ., அடிப்படையிலான பக்தர்கள் மேலாண்மை அமைப்பு. இதன் மூலம், அதிநவீன கேமராக்கள், சென்சார்கள், ட்ரோன்கள், ஜி.பி.எஸ்., வரைபட உதவியுடன் பக்தர்களின் நடமாட்டம் கண்காணிக்கப்படும். ஏதேனும் ஒரு பகுதியில், கூட்ட நெரிசல் ஏற்படுவது தெரிந்தால், முன்கூட்டியே அதை கணித்து அதிகாரிகளுக்கு இந்த ஏ.ஐ., அமைப்பு எச்சரிக்கும்.

வாகன ஓட்டிகளுக்கு ஜி.பி.எஸ்., வரைபட செயலிகள் உதவுவது போல, இந்த தொழில்நுட்பம் மூலம் பக்தர்களுக்கு நிகழ்நேர தகவல்கள் உடனுக்குடன் வழங்கப்படும். குறிப்பாக, மலையேற்ற பாதையின் நிலை, கூட்ட நெரிசல், தரிசனத்துக்கான காத்திருப்பு நேரம் குறித்து பக்தர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்படும்.

கூட்ட நெரிசலில் குழந்தைகள் அல்லது பெரியவர்கள் யாரேனும் தொலைந்து விட்டால், அவர்களின் புகைப்படத்தை வலையமைப்பில் பதிவேற்றி, முக அங்கீகார கேமராக்கள் மூலம் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான முதற்கட்ட டெண்டர் மற்றும் தொழில்நுட்ப மதிப்பீட்டு பணிகள் ஆகஸ்டுக்குள் நிறைவடையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *