ஹார்முஸ் திறப்பு வரவேற்கத்தக்கது- பிரிக்ஸ் பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாட்டில் அஜித் தோவல் பேச்சு
1 min read
Opening of the Strait of Hormuz is welcome – Ajit Doval speaks at BRICS security advisors’ conference.
23/6/2026
டெல்லியில் பிரிக்ஸ் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாடு நேற்று தொடங்கியது.
இம்மாநாட்டில் எல்லை தாண்டிய பயங்கரவாதம், சைபர் பாதுகாப்பு மற்றும் புதிய தொழில்நுட்பங்களால் எழும் பாதுகாப்பு சவால்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்படுகிறது.
இதில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, ரஷிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் செர்ஜி ஷோய்கு, ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் துணை செயலாளர் நெஜாமிபூர் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.
இதற்கு இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமை தாங்கினார். இன்று மாநாட்டில் தோவல் பேசியதாவது-
“அமெரிக்கா – ஈரான் இடையேயான ஒப்பந்தத்தை இந்தியா வரவேற்கிறது. இந்தியா இதை நேர்மறையாகவும் அதேநேரம் எச்சரிக்கையுடனும் கவனிக்கிறது.
இந்த உடன்பாடு உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பிற்குப் பெரிதும் உதவும் என்று நம்புகிறோம்.
கச்சா எண்ணெய், எரிவாயு போக்குவரத்தில் 20-25% பங்கை கொண்டுள்ள ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படுவதன் மூலம், விநியோகச் சங்கிலியில் இருந்த தடைகள் நீங்கும்.
குறிப்பாக உரம் மற்றும் ரசாயன துறைகளில் நிலவிய பற்றாக்குறைக்கு தீர்வு கிடைக்கும்’
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் உலகளாவிய சைபர் பாதுகாப்பு குறித்து பேசிய அவர்,
“உலக நாடுகள் புவிசார் அரசியல் சவால்கள் பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்தும் தொழில்நுட்ப அச்சுறுத்தல்களைச் சந்தித்து வருகின்றன.
சர்வதேச அளவில் மோதல்களை தீர்ப்பதற்கான அமைப்புகள் பலவீனமடைந்துவரும் வேளையில், பிரிக்ஸ் கூட்டமைப்பிற்குப் பெரிய பொறுப்பு உள்ளது” என தெரிவித்தார்.
இந்த பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாட்டில் பங்கேற்ற சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி உடன் அஜித் தோவல் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
கடந்த 2020 கல்வான் தாக்குதலுக்கு பிறகு இரு நாட்டு நல்லுறவை மீட்டெடுப்பது குறித்து அவர்கள் விவாதித்தனர். இருவரிடையேயான பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக அமைந்ததாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.