தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்டம்பர் 15-ந்தேதி முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்
1 min read
‘Thai Maman Thanga Mothiram’ Scheme: Chief Minister Vijay to launch it on September 15.
23.6.2026
“தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” தொடர்பாக தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாடு முதல்-அமைச்ர் விஜய் தலைமையில், வெற்றித் தமிழகம் தொலைநோக்கு திட்டங்களுக்கு (Vetri Thamizhagam vision document) தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதில் மிகவும் முக்கியமான திட்டம் “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்”.
அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் ஒவ்வொரு குழந்தையையும், மற்றும் பிரசவித்த தாயையும் கவுரவிக்கும் முகமாக “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” வடிவமைக்கப்பட்டு இன்று, இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு தாய் சேய் நலனை மேம்படுத்துவதற்கு மிகுந்த முன்னுரிமை அளித்து வருகிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதியுதவி, இலவச பிரசவம் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தை பராமரிப்பு சேவைகள், அவசர மகப்பேறு சிகிச்சை, ஊட்டச்சத்து அளித்தல், பிரசவத்திற்காக மருத்துவமனையை திட்டமிடும் முறை மற்றும் கர்ப்பிணி மற்றும் குழந்தைகள் கூட்டு கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு மென்பொருள் (PICME) உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு இம்முயற்சிகள் மாநிலத்தில் தாய் சேய் நலக் குறியீடுகளை குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்தியுள்ளன.
அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும், தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களை சார்ந்த தாய்மார்களின் குழந்தைகளுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சரின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்.
தமிழர் பாரம்பரியத்தில், “தாய்மாமன் சீர்” என்ற மரபின்படி, தமிழ்நாடு முதல்-அமைச்சர், தாயின் சகோதரர் புதிதாகப் பிறந்த குழந்தையை வரவேற்று வாழ்த்தும் வகையில் தங்கம் உள்ளிட்ட பரிசுகளை வழங்கும் விதமாகவும், தமிழர் பண்பாட்டு மரபை பிரதிபலிக்கும் வகையிலும், அரசு ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்மாமனின் பங்கை ஏற்று, அன்பும் அக்கறையும் நிறைந்த வரவேற்பின் அடையாளமாக ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாடு அரசின் சுகாதாரச் சேவைகளில் மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் நோக்கிலும், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தையின் பிறப்பை நினைவு கூறும் வகையிலும், தாய்மையின் மகிழ்ச்சி மற்றும் முக்கியத்துவத்தை கொண்டாடும் வகையிலும் “தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம்” [Thaaimaaman Thanga Mothira Thittam] செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தை மாநிலத்தில் செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் ரூ.755.83 கோடி நிதியை ஒதுக்கீடு செய்கிறது. இத்திட்டற்கான ஒப்பந்த புள்ளிகள் உடனடியாக கோருவதற்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இத்திட்டத்தின் கீழ், 22 ஜூன் 2026 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகள் பயன் பெறுவார்கள். “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15, 2026 அன்று தமிழ்நாடு முதல்-அமைச்சரால் துவக்கி வைக்கப்படும்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.