முதல்-அமைச்சர் விஜய்யை ஒருமையில் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு
1 min read
Case registered against Anitha Radhakrishnan for addressing Chief Minister Vijay in the singular
24.6.2026
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஆத்தூரில் கடந்த சனிக்கிழமை (20.6.2026) முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 108-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் எம்.எல்.ஏ.வுமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு முதல்-அமைச்சர் விஜய்யை பற்றி ஒருமையிலும், அவதூறாகவும் பேசி, கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். மேலும் சட்டசபையில் அவர் அமர்ந்திருப்பது குறித்தும் விமர்சனம் செய்தார்.
திருச்செந்தூர் எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் அந்த பொதுக்கூட்டத்தில் பேசியபோது, “நேற்றைய தினம் சட்டமன்றத்தில் முதலில் அந்த நடிகர் கட்சியைச் சேர்ந்த அவரை முதலில் பேச சொன்னார்கள். அவர் பேசினார். இரண்டாவதாக நமது முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசந்திரன் பேசினார். அவரது பேச்சைக் கண்டு எதிரிகள் அலற ஆரம்பித்தனர். சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் அவரது முகத்தை அப்படி ஒருபுறமாக தொங்க போட்டுக் கொண்டார். இன்றைக்கு கவர்னர் உரைக்கே இந்த பாடு என்றால், அடுத்து பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிறபோது ஒவ்வொருவரும் துண்டை காணோம், துணியை காணோம் என ஓடப் போகிறார்கள். அதுபோல ஆஸ்டின் அண்ணன் பேசியபோது அலற விட்டுவிட்டார். அதுமட்டுமல்ல முதல்-அமைச்சர் முகத்துக்கு நேரே கையை நீட்டி வாயை திறந்து பேசமாட்டீர்களா முதல்-அமைச்சரே என்று கேட்டார். அவருக்கு ஒன்னும் ஓடவில்லை. நம்மை கேட்பதற்கு இப்படி வந்துட்டார்களே. நாம் வந்து மாட்டிக்கிட்டோமே. நாம் எப்படி வீட்டில் நடிகையோட மகிழ்ச்சியாக இருந்தோம். நம்மை இப்படி மாட்டி விட்டுட்டாங்களே, இப்படி தவிக்கின்ற அவரது மனநிலை நமக்கு தெரிகிறது.
நான் ஒரு வியாபாரி. ஒருவர் கடைக்குள் வரும்போதோ அவர் கடன் வாங்க வருகிறாரா, அல்லது பணம் வைத்துள்ளாரா என்பது எனக்கு தெரியும். அதுபோல சட்டமன்றத்தில் பார்க்கும்போது, ஒரு முதல்-அமைச்சர் முழிக்கின்ற முழியை வைத்தே, அடப் பாவமே என்னை இப்படி மாட்டி விட்டுட்டீங்களே என அவர் கெஞ்சுகிற நிலையை என்னான் உணர முடிகிறது. திங்கள்கிழமை கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் நமது இளம் தலைவர் உதயநிதி பேச உள்ளார். அப்போது முதல்-அமைச்சர் பேசும்போது அவருக்கு எழுதி கொடுத்திருப்பதையே அவர் கஷ்டப்பட்டு வாசிப்பார். இதுதான் இன்று முதல்-அமைச்சரின் கதை” என்று கூறினார்.
ஆத்தூர் காவல் நிலையத்தில் த.வெ.க.வினர் புகார்:
இந்ந நிலையில் முதல்-அமைச்சர் விஜய் பற்றிய, எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணனின் பேச்சு குறித்து ஆத்தூர் பகுதி தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகிகள் ஆத்தூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனுவை அளித்தனர். அந்த மனுவில், தமிழக முதல்-அமைச்சர் விஜய்யை ஒருமையிலும், கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும் தி.மு.க. மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்ந்து பேசிவருவதாக புகார் தெரிவித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் அவர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விஜய் குறித்து ஒருமையில் பேசியது, மரியாதைக் குறைவாக பேசி அவதூறு வார்த்தைகளை பேசியது, பொது இடத்தில் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் விதமாக பேசியது என 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.