June 24, 2026

Seithi Saral

Tamil News Channel

மின்சார வாரியம்: 401 பேருக்கு பணி நியமன ஆணையை முதல்-அமைச்சர் விஜய் வழங்கினார்

1 min read

Electricity Board: Chief Minister Vijay handed over appointment orders to 401 individuals.

24.6.2026
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற மின்சாரத்துறை தொடர்பான ஆய்வுக்கூட்டத்தின்போது, மின்சார வாரியத்தில் நிலவும் பிரச்சனைகளுக்குப் பல்வேறு நிலைகளில் உள்ள 70,000-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளதும் ஒரு காரணம் என்று தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்துடன், எரிசக்தித் துறையின் மனிதவளத்தை வலுப்படுத்தும் முயற்சியை முன்னெடுத்து, தடையற்ற மற்றும் சீரான மின்சாரம் வழங்கிடும் வகையில்,

ஓராண்டுக்குள் குறைந்தபட்சம் 15,000 பணியாளர்களை உடனடியாக நியமனம் செய்திடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டார். மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தெரிவு செய்யப்பட்ட 401 நபர்களுக்கும் வாரிய விதிமுறைகளின்படி, உடனடியாக பணிநியமன நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் உத்தரவிட்டார்.

அதனடிப்படையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 383 உதவிப் பொறியாளர் (மின்னியல்) மற்றும் 18 உதவி கணக்கு அலுவலர்களுக்கு முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய் இன்று பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

தமிழ்நாடு அரசின் வெளிப்படையான ஆட்சி முறையின் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் இந்தப் பணி நியமனங்கள், எரிசக்தித் துறையின் செயல்திறனை மேலும் மேம்படுத்துவதோடு, தமிழ்நாட்டு மக்களுக்குத் தரமான மற்றும் தடையற்ற மின் சேவைகளை வழங்குவதற்கான மனிதவளத்தை வலுப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாகவும் இது அமையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *