மியான்மரில் கடந்த 6 மாதங்களில் 702 அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்த ராணுவம்!
1 min read
The military in Myanmar has killed 702 innocent civilians over the past six months!
24.6.2026
மியான்மரில் கடந்த 6 மாதத்தில் அந்நாட்டு ராணுவம் 702 அப்பாவி பொதுமக்களை கொன்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.
உயிரிழந்த 702 பேரில் 224 பெண்கள் என்றும் 153 பேர் குழந்தைகள் என்றும் ஐநா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதில் வான்வழித் தாக்குதல்களில் பலியானவர்கள் 505 பேர் ஆவர்.
போர் விமானங்கள், டிரோன்கள் ஆகியவற்றை பயன்படுத்தி பொதுமக்கள் வசிப்பிடங்கள் மீது குண்டுமழை ராணுவம் குண்டு மழை பொழிந்துள்ளது.
இது குறித்து ஐநா செய்தித் தொடர்பாளர் ரவினா ஷாம்தசானி கூறுகையில், “இந்த 702 மரணங்களுக்கும் மியான்மர் ராணுவமே முழுப் பொறுப்பு. இது பிற ஆயுதக் குழுக்களால் ஏற்பட்ட உயிர்ச்சேதங்களை உள்ளடக்காத, எங்களால் உறுதிசெய்யப்பட்ட குறைந்தபட்ச எண்ணிக்கை மட்டுமே” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2021ஆம் ஆண்டு ஆங் சான் சூச்சியின் ஆட்சியை கவிழ்த்து, மியான்மர் ராணுவம் அதிகாரத்தை கைப்பற்றியதிலிருந்து அங்கு உள்நாட்டுப் போர் நீடித்து வருகிறது.
ஐந்து ஆண்டுகால நேரடி ராணுவ ஆட்சிக்குப் பிறகு, கடந்த ஆண்டு கண்துடைப்புக்காக தேர்தலை ராணுவமே நடத்தியது.
இதில் ராணுவத்தின் ஆதரவு பெற்ற கட்சிகள் மட்டுமே போட்டியிட அனுமதிக்கப்பட்டு எளிதாக வெற்றி பெற்றன.
ராணுவப் புரட்சிக்குத் தலைமை தாங்கிய மின் ஆங் ஹ்லைங் நாட்டின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆங்காங்கே செயல்பட்டு வரும் கிளர்ச்சிக் குழுக்களை கட்டுப்படுத்தும் போர்வையில் போதும்மாக்கள் வசிப்பிடங்களை குறிவைத்து ராணுவம் நடத்தி வரும் தாக்குதல்களால் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
கடந்த மாத இறுதியில் மியான்மர் அதிபர் இந்தியாவுக்கு 5 நாள் அரசுமுறை பயணம் வந்து பிரதமர் மோடியை சந்தித்த சூழலிலே ஐநாவின் இந்த அறிக்கை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.