June 24, 2026

Seithi Saral

Tamil News Channel

காதலனுடன் சேர்ந்து பெற்ற தாய், தந்தை, தங்கையை கொன்ற பெண்

1 min read

Woman who killed her birth mother, father, and younger sister along with her lover.

24.6.2026
பெங்களூரில் பெற்றோர் மற்றும் தங்கையை இளம் பெண் ஒருவர் காதலனுடன் சேர்ந்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட கணினி பொறியாளர் சோமசுந்தரம் (வயது 52), அவரது மனைவி முத்துலட்சுமி மற்றும் அவர்களது மகள்கள் ஸ்வேதா (வயது 24), சுப்ரியா (வயது 19) ஆகியோர் பெங்களூரு ராமமூர்த்தி நகரில் வசித்து வந்தனர்.

இதில் மூத்த மகள் ஸ்வேதாவும் கணினி பொறியாளராக பணியாற்றி வந்த நிலையில், சீகேஹள்ளி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களாக அவர் வீட்டிற்கு வராததால், பெற்றோர் அவரைப் பார்ப்பதற்காக அந்த குடியிருப்புக்குச் சென்றுள்ளனர்.

அங்கு சென்ற பெற்றோருக்கு, ஸ்வேதா தனது ஆண் நண்பரான கென்னத் என்பவருடன் திருமணம் செய்துகொள்ளாமல் ‘லிவ்-இன்’ உறவில் ஒன்றாக வாழ்ந்து வந்தது தெரியவந்தது. இதனை சோமசுந்தரமும் முத்துலட்சுமியும் கண்டித்ததால் இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ஸ்வேதா மற்றும் அவரது காதலன் கென்னத் ஆகிய இருவரும் சேர்ந்து, பெற்றோர் என்றும் பாராமல் சோமசுந்தரம் மற்றும் முத்துலட்சுமியை கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளனர்.

அதனைத் தடுக்க வந்த தங்கை சுப்ரியாவையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. இக்கோரத் தாக்குதலில் முத்துலட்சுமியும் சுப்ரியாவும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். படுகாயங்களுடன் தப்பி ஓடி உயிருக்கு போராடிய சோமசுந்தரமும் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த கொலை சம்பவத்திற்குப் பிறகு ஸ்வேதா மற்றும் கென்னத் ஆகிய இருவரும் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகினர். இவர்களைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து பெங்களூரு போலீசார் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், புதுச்சேரியில் உள்ள ஒரு பிரியாணி கடை அருகே நின்றுகொண்டிருந்த ஸ்வேதாவை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் தனது பெற்றோரையும் தங்கையையும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து, புதுவைக்கு விரைந்த பெங்களூர் கே.எஸ்புரம் போலீசார் ஸ்வேதாவை முறைப்படி கைது செய்து அழைத்துச் சென்றனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள அவரது காதலன் கென்னத்தை போலீசார் தொடர்ந்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *