June 27, 2026

Seithi Saral

Tamil News Channel

கடையத்தில் செல்லம்மா-பாரதி 129 ஆம் திருமண நாள் விழா

1 min read

Chellamma-Bharathi 129th Wedding Anniversary Celebration in Kadayam

27/6/2026
தென்காசி மாவட்டம் கடையத்தில் சேவாலயா நிறுவனம் சார்பாக செல்லம்மா பாரதி தம்பதியின் 129 ஆம் திருமண நாள் விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

26 ஜூன் முதல் 3 நாட்கள் நடைபெறவிருக்கும் இவ்விழாவின் இரண்டாம் நாள் துவக்கத்தில், சிறப்பு விருந்தினர்கள் செல்லம்மா-பாரதி தம்பதியின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

செல்லம்மா பாரதி தம்பதியினர் புகைப்படம் வைக்கப்பட்ட பல்லக்கு ஊர்வலத்தை மகாகவியின் கொள்ளுப்பேரன் அர்ஜுன் பாரதி மற்றும் செல்லம்மாவின் சகோதரர் மகன் சுந்தர் அவர்கள் கொடியசைத்து துவக்கி

வைத்தனர். அலங்கரிக்கப்பட்ட பல்லக்கு கடையம் வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்து. ஊர்வலத்தில் பாரதி செல்லம்மா குடும்பத்தினர், பி என் ஒய் நிறுவன உயரதிகாரிகள் அர்விந்த் குருப்ரசாத், வித்யா துரை, சத்திரம் பள்ளி மாணவர்கள், பொது மக்கள் மற்றும் பாரதி அன்பர்கள் கலந்து கொண்டனர்.

மாலை நேர நிகழ்ச்சிகளில், தென்காசி மாவட்ட நூலக அலுவலர், பி மேரி அவர்களும், சேலத்தை சேர்ந்த எழுத்தாளர் இரா ஹரிஹர கோபால் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

மேரி அவர்கள் தனது உரையில் “நாம் கொண்டாடுவது பாரதி செல்லம்மா திருமணநாளை மட்டுமல்ல அன்பு, தியாகம், சமுதாய முன்னேற்றத்திற்காக உழைத்தல் ஆகியவற்றில் மனமொத்து வாழ்ந்த சிறப்பான வாழ்வை கொண்டாடுகிறோம்” என்றார். சிறப்பான இவ்விழாவில் பங்கேற்க கிடைத்த வாய்ப்பு குறித்து மகிழ்ச்சியையும் தெரிவித்தார்.

எழுத்தாளர் ஹரிஹர கோபால் அவர்கள் பாரதியின் பாப்பா பாட்டு, வாழ்க்கை சிறக்க வாழ்வில் வெற்றி பெற தேவையான கருத்துகள் அனைத்தையும் எளிமையாகவும் வலிமையாகவும் குழந்தைகளுக்கு வலியுறுத்தும் கவிதை எனப் புகழ்ந்தார். கடனாக வாங்கிய அரிசிய குருவிகளுக்கு வாரியிறைத்துவிட்டு காக்கை குருவி எங்கள் சாதி” என்று பாடிய பாரதியுடன், மன்னன் அளித்த பரிசுத் தொகையில் மூட்டை மூட்டையாக புத்தகங்களை வாங்கிவிட்டு, மனைவிக்கென ஒரேயொரு நூல்சேலையை வாங்கி வந்த பாரதியுடன் வாழ்க்கை நடத்துவதில் உள்ள சிரமங்களையெல்லாம் பொருட்படுத்தாது அவர் மேல் மாறா அன்பு கொண்டு அவருக்கு உறுதுணையாக, இருந்த செல்லம்மாவைப் போற்றினார். சிறிய வயதிலேயே கணவனை இழந்த பின்னும் மனஉறுதியுடன், தன் இரு மகள்கள், பேத்தி அனைவரையும் நேர்மறைச் சிந்தனைகளுடன் வளர்த்து வாழ்வில் நல்ல நிலைமை அடைய வைத்த செல்லம்மாவைக் குறித்து அவர் பேசியது நெகிழ்ச்சியூட்டுவதாக இருந்தது.

முன்னதாக சேவாலயாவின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் வா.முரளிதரன் வரவேற்புரை வழங்கினார்.
திருநெல்வேலி சிவாலயா நாட்டியப்பள்ளி மாணவர்களின் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

சேவாலயாவின் ஆதரவாளர் மற்றும் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் கா சோ கல்யாணி சிவகாமிநாதன் அவர்கள் நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள், பாரதி அன்பர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

சேவாலயா நிறுவனம், கடையத்தில் 2019 முதல் செல்லம்மா-பாரதி தம்பதியின் திருமண நிகழ்வை விமரிசையாகக் கொண்டாடி வருகிறது. அங்கே அவர்களின் சிலையை நிறுவி ஒரு கற்றல் மையத்தையும் நடத்தி வருகிறது. மேலும் கீழக்கடையம் இரயில் நிலையத்தில் அவர்கள் வாழ்க்கை நிகழ்வுகளை ஓவியமாக அமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சேவாலயா 1988 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட, சென்னையை தலைமையிடமாகக் கொண்ட பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனம் ஆகும். இந்தியா முழுவதும் 60 க்கும் மேற்பட்ட மையங்களில் செயல்பட்டு வரும் சேவாலயா, பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்குகிறது. மேலும் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகளையும் நடத்துகிறது. குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லங்கள், கோசாலைகள், இயற்கை விவசாய பண்ணைகள், மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ மையங்களும் சேவாலயா மூலம் நடத்தப்படுகின்றன. இது தவிர, சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கிராமப்புற மேம்பாடு, பேரிடர் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. சேவாலயாவின் அனைத்து சேவைகளும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றன. 38 ஆண்டுகளில் 19.02 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளின் வாழ்க்கை முன்னேற்றத்தில் சேவாலயா பங்காற்றியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *