பாக்யராஜ் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம்
1 min read
Bhagyaraj’s body cremated with state honors amidst a 72-gun salute
28.6.2026
தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர், திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் என பன்முக திறமையால் பளிச்சிட்டவர் பாக்யராஜ். ரசிகர்களின் மனநிலையை சரியாக புரிந்து, சாதாரண குடும்ப வாழ்க் கையை சுவாரசியமான திரைக்கதையாக மாற்றிய படைப்பாளி பாக்யராஜ், ‘திரைக்கதை மன்னன்’ என்று திரையுலகில் கொண்டாடப்பட்டார்.
இந்த நிலையில், இயக்குனர் பாக்யராஜ் மாரடைப்பால் நேற்று மரணம் அடைந்தார். நேற்று அதிகாலை எழுந்து நடைபயிற்சி முடித்து வீடு திரும்பியுள்ளார். அப்போது வந்த செல்போன் அழைப்பை ஏற்று பேசிக் கொண்டிருந்த பாக்யராஜ் திடீரென மாரடைப்பு ஏற்பட, அப்ப டியே மயங்கி சரிந்தார். அதனைத்தொடர்ந்து அவர் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே பாக்யராஜின் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 73.
அதன்பின்னர் பாக்யராஜின் உடல், சென்னை நுங்கம்பாக்கத் தில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு முதல்-அமைச்சர் விஜய் உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள் அமைச்சர் விஜய் மற்றும் நடிகர்-நடிகைகள் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில், பொதுமக்கள் அஞ்சலி நிறைவு பெற்றதையடுத்து மறைந்த இயக்குனர் பாக்யராஜ் உடலுக்கு இறுதி சடங்குகள் நடைபெற்றன. பின்னர் காவல்துறை அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து பாக்யராஜின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. பாக்யராஜ் உடலை நடிகர்கள் சரத்குமார், பார்த்திபன் ஆகியோர் தோளில் சுமந்து சென்றனர். இறுதி ஊர்வலத்தில் திரையுலகினர் பங்கேற்றனர்.
இறுதி ஊர்வல வாகனத்தில் மனைவி பூர்ணிமா, மகன் சாந்தனு இருந்தனர். நுங்கம்பாக்கம் இல்லத்தில் இருந்து பெசண்ட் நகர் மின் மயானத்திற்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டது. வழிநெடுகிலும் சாலையின் இருபுறமும் திரண்டிருந்த மக்கள் பாக்யராஜுக்கு பூக்களை தூவி கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர். சுமார் 1 மணி நேரத்திற்கு பிறகு பாக்யராஜ் உடல் பெசண்ட் நகர் மின்மயானத்திற்கு வந்தடைந்தது.
பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் விஜய் அறிவித்திருந்தார். அதன்படி தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் என்.ஆனந்த், ராஜ்மோகன் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அதைத்தொடர்ந்து 72 குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. கம்பீரமாக அணிவகுத்து நின்ற போலீசார் தலா 3 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் பாக்யராஜ் உடலுக்கு அவரது சமுதாய முறைப்படி இறுதி சடங்குகள் நடைபெற்றன. அப்போது பாக்யராஜ் உடலுக்கு மனைவி பூர்ணிமா முத்தமிட்டு பிரியாவிடை கொடுத்தார். தொடர்ந்து மகன் சாந்தனு தந்தை பாக்யராஜுக்கு இறுதி சடங்கை செய்தார். அதன்பிறகு அவருடைய உடல் பெசண்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.