தமிழகம் முழுவதும் மாநகராட்சி அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை
1 min read
Anti-corruption raids at municipal corporation offices across Tamil Nadu.
3/7/2026
தமிழகம் முழுவதும் வெவ்வேறு மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையை இன்று மேற்கொண்டனர்.
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக அரசு அமைந்த பிறகு, ஒவ்வொரு வாரமும் ஒரு துறையை தேர்வு செய்து, அதன் அலுவலகங்களில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தப்படுவது வழக்கமாகி உள்ளது.
முந்தைய வாரங்களில் வட்டார போக்குவரத்து அலுவலகம், வருவாய்த்துறை, பத்திரப்பதிவு அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. இன்று தமிழகத்தின் வெவ்வேறு மாநகராட்சி அலுவலகங்களில் சோதனை நடத்தப்படுகிறது.
சென்னை மாநகராட்சி தண்டையார்பேட்டை மண்டல அலுவலகம், காஞ்சிபுரம், கும்பகோணம் மாநகராட்சி அலுவலகங்களில் இன்று மாலை 4 மணி முதல் ரெய்டு தொடங்கி நடந்து வருகிறது.
அதேபோல, திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலகத்திலும் இன்று மாலை 4 மணிக்கு சோதனை தொடங்கியது. லஞ்ச ஒழிப்பு போலீசார் கூடுதல் எஸ்.பி. எஸ்கால் தலைமையிலான அதிகாரிகள் மாநகராட்சிஅலுவலகத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அலுவலக கோப்புகள், அங்கு பணிபுரியும் ஊழியர்கள் உள்ளிட்ட பலரிடமும் அவர்கள் விசாரணை நடத்தினர்.
திருநெல்வேலியை போன்றே ஈரோடு, புதுக்கோட்டை, திருவண்ணாமலை மாநகராட்சி அலுவலகங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாநகராட்சிகளிலும் நடக்கும் லஞ்ச ஒழிப்பு சோதனை பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மாநகராட்சி அலுவலகங்களில் மட்டுமல்லாது, நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை நீடித்தது. திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் உள்ள பேரூராட்சி அலுவலகம், திருத்தணி, தென்காசி, கள்ளக்குறிச்சி, அரியலுார் நகராட்சி அலுவலகங்களிலும் போலீசார் அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர்.
கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகம், சேலம் தாதகாப்பட்டியில் உள்ள கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகம், ராஜபாளையம் நகராட்சி அலுவலகம், காரைக்குடி மாநகராட்சி பொறியாளர் அலுவலகம், மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம், குன்னூர் நகராட்சி அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் படையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.