தமிழக பாடநூல் கழகத்தின் புதிய தலைவராக லயோலா மணி நியமனம்
1 min read
Loyola Mani appointed as the new Chairman of the Tamil Nadu Textbook Corporation.
13.7.2027
தமிழக பாடநூல் கழகத்தின் புதிய தலைவராக தவெக பிரமுகர் லயோலா மணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தவெக ஆட்சி அமைவதற்கு ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும், களத்திலும் மிக முக்கியப் பங்காற்றிய லயோலா மணிக்கு, இந்த அரசு பதவி வழங்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. தவெக தலைவர் விஜய், ஆட்சி அமைந்தவுடன் பல்வேறு முக்கியப் புள்ளிகளுக்கு அரசுப் பதவிகளை வாரிக் கொடுத்த நிலையில், சற்று தாமதமாக என்றாலும் லயோலா மணிக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பதாக அவருடைய ஆதரவாளர்கள் இதனை வரவேற்றுள்ளனர்.
இருப்பினும், இந்த நியமனத்தை முதன்மையாக எதிர்த்து நாம் தமிழர் கட்சியினர் (நா.த.க) சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்ட நா.த.கவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் லயோலா மணியின் நியமனத்தைக் கடுமையாகச் சாடியுள்ளனர். “காக்கா பிரியாணி சாப்பிட்டால் காக்கா குரல்தான் வரும்” என்பது போன்ற திரைப்பட வசனங்களை ஒப்பிட்டும், விஜய்யின் பழைய சினிமாப் பாடல்களைக் குறிப்பிட்டு, இவைதான் இனி தமிழ்நாட்டுப் பாடத்திட்டத்தில் இடம்பெறப் போகிறதா எனக் கேள்வி எழுப்பியும் சமூக வலைதளங்களில் அவர்கள் சரமாரியாகத் தாக்கி வருகின்றனர்.
மறுபுறம், கடந்த கால ஆட்சிகளில் திண்டுக்கல் லியோனி, முன்னாள் அமைச்சர் வளர்மதி போன்றோர் பாடநூல் கழகத் தலைவர்களாக நியமிக்கப்பட்டபோது எழாத விமர்சனங்கள், தற்போது லயோலா மணி நியமனத்திற்கு மட்டும் ஏன் எழ வேண்டும் என்று தவெக தரப்பினர் கேள்வி எழுப்புகின்றனர். பாடநூல் கழகத் தலைவர் பதவி என்பது மேதாவிகளுக்கு மட்டுமே உரியது அல்ல என்றும், கல்வி மற்றும் மாணவர்களின் நிலை தெரிந்த யாருக்கு வேண்டுமானாலும் வழங்கப்படலாம் என்றும் அவர்கள் வாதிடுகின்றனர். கடந்த கால நடைமுறைகளும் இதையே காட்டுவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஒரு தமிழராக, தமிழ்த் தேசிய உணர்வாளராக அறியப்படும் லயோலா மணிக்கு இந்த அரசுப் பதவி கிடைத்திருப்பதை சகித்துக் கொள்ள முடியாமல் நாம் தமிழர் கட்சியினர் விமர்சிப்பதற்குப் பின்னால், தங்களால் அரசுப் பதவிகளைப் பெற முடியவில்லையே என்ற ஆற்றாமையும், அரசியல் ஆதங்கமுமே காரணம் என்று லயோலா மணியின் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த விவகாரம் தற்போது தவெக மற்றும் நாம் தமிழர் கட்சிக்கு இடையேயான சமூக வலைதளப் போராக உருவெடுத்துள்ளது.