நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை 62-ஆக உயர்த்த மனு – மாநிலங்கள் முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
1 min read
Plea to raise judges’ retirement age to 62: Supreme Court directs states to decide.
6.8.2026
நீதித்துறை அதிகாரிகளின் ஓய்வு பெறும் வயதை 60 வயதுக்கு மேல் உயர்த்துவதை எதிர்க்கும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், தங்கள் நிலைப்பாட்டை செப்டம்பர் இரண்டாம் தேதிக்குள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
அகில இந்திய நீதிபதிகள் சங்கம் (AIJA) தாக்கல் செய்த மனு, இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய் மால்யா பாக்சி, வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அந்த அமர்வு, நீதித்துறை தீர்ப்புக்குப் பதிலாக, மாநில அரசுகளே சுயமாக முடிவெடுப்பது சிறப்பாக இருக்கும் என்று கூறியது. விசாரணை நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 1992-ஆம் ஆண்டிலிருந்து இரட்டிப்பாகி, சுமார் 10,000-லிருந்து தற்போது 20,000-க்கும் அதிகமாக உள்ளது.
உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 1992-ல் 568-ஆக இருந்தது, தற்போது அது 1,114-ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவித்தது.
இதையடுத்து இந்த வழக்கில் மாநிலங்கள் வாதிடுகையில், அரசு ஊழியர்களுக்கான சலுகைகளைப் போலவே, சில மாநிலங்கள் நீதித்துறை அதிகாரிகளுக்கான ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 61-ஆக உயர்த்தியுள்ளன.
மேலும், நீதித்துறை அதிகாரிகளின் ஓய்வு பெறும் வயதை 62-ஆக உயர்த்துவது, அரசு ஊழியர்களிடையே ஏற்றத்தாழ்வையும் அதிருப்தியையும் உருவாக்கும் என்றும், அவர்களும் இதேபோன்ற சலுகைகளைக் கோருவார்கள் என்றும், இது அரசுக்கு ஒரு பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தும் என்றும் கூறியது.
இதையடுத்து நீதிமன்ற அமர்வு கூறும்போது, “இந்த இரண்டு ஆட்சேபனைகளும் நிராகரிக்கப்படுகின்றன. ஒரு நீதித்துறை அதிகாரி ஓய்வு பெறும்போது, அரசு அவருக்கு ஒரு தொகையையும், அவர் கடைசியாகப் பெற்ற சம்பளத்தில் பாதிக்கும் மேற்பட்ட ஓய்வூதியத்தையும் வழங்குகிறது.
காலி இடத்தை நிரப்பும்போது, புதிதாக நியமிக்கப்படுபவருக்கு அரசு சம்பளம் வழங்குகிறது. அனுபவம் வாய்ந்த மற்றும் திறமையான நீதித்துறை அதிகாரிகளை தக்கவைத்துக் கொள்வது மாநிலத்திற்கும் நீதித்துறைக்கும் நிதி ரீதியாகப் பயனளிக்கும்.
ஆனால், மாநிலங்களின் நிர்வாக முடிவுகள் மூலம் இந்தப் பிரச்சினையை சுமூகமாகத் தீர்க்க முடியும் என்று நாங்கள் கருதுகிறோம்.
அரசு ஊழியர்களின் தற்போதைய ஓய்வு வயதை பொருட்படுத்தாமல், நீதித்துறை அதிகாரிகளின் ஓய்வு வயதை உயர்த்துவது தொடர்பான பிரச்சினையை மாநிலங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
நீதித்துறை அதிகாரிகளின் ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62-ஆக உயர்த்துவதற்கு ஆதரவாக இவ்விவகாரத்தில் உயர் நீதிமன்றங்கள், மாநில அரசுகளுக்கு வலு சேர்க்க வேண்டும்” என்றும் உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.