August 23, 2026

Seithi Saral

Tamil News Channel

கியாஸ் சிலிண்டர் முன்பதிவுக்கு ஆவணங்கள் சமர்ப்பிக்க காலக்கெடு மேலும் நீட்டிப்பு

1 min read

Deadline for submitting documents for gas cylinder booking extended further

23.8.2026
கியாஸ் நிறுவனங்கள் மற்றும் பெட்ரோலியத்துறை அமைச்சகத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் மாதம் ஒன்றுக்கு 25 லட்சத்திற்கும் அதிகமான வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண் டர் இணைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுவதாக சந்தேகம் எழுந்தது.

அதாவது மானியத்துடன் கூடிய சிலிண்டரை பெற்று வணிக பயன்பாடுகளுக்கு பயன்படுத்துவதாகவும், ஒரே வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகள் இருப்பதாகவும், இறந்துபோன நபர்கள் பெயரில் உள்ள இணைப்புகளை வேறு சிலர் பயன்படுத்தி வருவதாகவும், 5 பேர் உள்ள ஒரு குடும்பத்திற்கு 35 முதல் 40 நாட்கள் வரை ஒரு சிலிண்டர் போதுமானதாக இருக்கும் நிலையில், ஒரே ஒரு நபர் மட்டுமே உள்ள வீடுகளில் கூட வருடத்திற்கு 12 சிலிண்டர்கள் பெறப்பட்டு வருவதாகவும் தெரிகிறது.

இதையடுத்து கள்ளச் சந்தையில் சமையல் கியாஸ் சிலிண்டர் விற்பனை செய்வதை தடுக்கவும், சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகத்தை ஒழுங்குபடுத்தும் நோக்கத்திலும் சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கு ‘இ-கே.ஒய்.சி.’ அடிப்படையில் ஆதார் உள்ளிட்ட ஆவ ணங்களை செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது.

மேலும், மத்திய கிழக்கு போர் காரணமாக சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டதால். சமையல் கியாஸ் சிலிண்டர் முன்பதிவில் மத்திய அரசு சமீபத்தில் புதிய கட்டுப்பாடுகளையும் கொண்டு வந்தது.

அதன்படி கியாஸ் சிலிண்டர் முன்பதிவு செய்யும் கால அளவு உயர்த்தப்பட்டது. நகர்புறங்களில் வசிப்பவர்கள் 25 நாட்களுக்கு ஒரு முறையும், கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் 45 நாட்களுக்கு ஒருமுறையும் கியாஸ் சிலிண்டர் முன்பதிவு செய்யும் புதிய நடை முறை கொண்டு வரப்பட்டது.

மேலும், ‘இ-கே.ஒய்.சி.’ ஆவணங்களை ஆகஸ்டு 16-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்து இருந்தது.

இதனைத்தொடர்ந்து வாடிக்கையாளர்கள் பலரும் ஆன்லைன் மூலமும், சிலிண்டர் வினியோக அலுவலகங்களுக்கு நேரடியாக சென்றும் ஆவணங்களை சமர்ப்பித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வாடிக்கையாளர்களின் கோரிக்கையை ஏற்று ஆவணங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசத்தை மத்திய அரசு இன்று வரை நீட்டித்து இருந்தது.

வீடுகளுக்கு தற்போது மானிய விலையில் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய 3 நிறுவனங்கள் மூலம் கியாஸ் விநியோகம் செய்யப்படுகிறது.

தமிழகம் முழுவதும் சராசரியாக 85 சதவீத வாடிக்கையாளர்கள் தங்களது ஆவணங்களை பதிவேற்றம் செய்துவிட்ட நிலையில் 15 சதவீத வாடிக்கையாளர்கள் பதிவு செய்யவில்லை என்று தெரிகிறது.

ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைந்த நிலையில் தமிழகம் முழுவதும் சுமார் 50 லட்சம் வாடிக்கையாளர்கள் இன்று (24-ந்தேதி) முதல் மானியத்துடன் கூடிய வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் முன்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் ஆவணங்களை பதிவேற்றம் செய்யாத வாடிக்கையாளர்கள் தவித்தனர். அவர்கள் மேலும் கால அவகாசம் வழங்க என்று கோரிக்கை வைத்தனர்.

இதனை ஏற்று கியாஸ் சிலிண்டர்கள் பெற ஆவணங்களை சமர்ப்பிப்பது வருகிற 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கியாஸ் வினியோகஸ்தர்கள் சார்பில் வீடுகளுக்கு கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்யும் பணியாளர்கள், தங்களிடம் உள்ள ஆண்ட்ராய்டு போனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள செயலி மூலம் வீடுகளுக்கு சிலிண்டர் வினியோகம் செய்யும் போது ஆவணங்களை பதிவேற்றம் செய்தனர்.

அதாவது யார் பெயரில் சிலிண்டர் இணைப்பு உள்ளதோ அவரை, மொபைல் கேமராவை பயன்படுத்தி புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்தனர். இது மிகவும் எளிமையான நடைமுறையாகும்.

ஒரு சிலர் கியாஸ் வினியோகஸ்தர்களின் அலுவலகத்திற்கு சென்று அவர்களிடம் உள்ள மொபைல் போனில் ஆவணங்களை பதிவேற்றம் செய்தனர். வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு எண்ணை நிறுவனங்கள் சார்பில் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

அந்த செயலியில் நுழைந்து ஆவண விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். தமிழகத்தில் இணைப்பு பெற்றுள்ள குடும்பத் தலைவர்களின் குடும்பம் தமிழகத்தில் வசித்து வரும் நிலையில், குடும்பத் தலைவர்கள் மட்டும் உலகில் கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் பணியாற்றி வருகின்றனர்.

அவர்களுக்கு இத்தகைய செயலி மொபைல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. அதன் மூலம் அவர்கள் ஆவணங்களை சமர்ப்பித்தனர்.

தற்போது சிலிண்டர்களுக்கு ஆவணங்களை சமர்ப்பிக்க வருகிற 31-ந்தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து மதுரையை சேர்ந்த கியாஸ் நிறுவன உரிமையாளர் பாண்டி கூறியதாவது:-

கியாஸ் முன்பதிவு செய்வதற்கு இ-கே.ஒய்.சி. எனப்படும் ஆவணங்களை சமர்ப்பிக்க காலக்கெடு கடந்த 16-ந்தேதி என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பின்னர் 23-ந்தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டது.

இதனால் இன்று முதல் கியாஸ் சிலிண்டர் பதிவு செய்ய முடியுமா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் இந்த வாரம் முழுவதும், அதாவது வருகிற 31-ந்தேதி வரை ஆவணங்கள் சமர்ப்பிக்க மீண்டும் கால நீட்டிப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று இரவுதான் எங்களுக்கு கிடைத்தது.

இதனால் இ-கே.ஒய்.சி. பதிவு தொடர்பாக வாடிக்கையாளர்கள் எந்தவித அச்சமும் படவேண்டாம். அதேபோல் இ-கே.ஒய்.சி. பதிவு என்பது தவறான முறையில் சிலிண்டர்களுக்கான மானியத்தொகை செல்லாததை தடுக்கவே உருவாக்கப்பட்டுள்ளது. தவறான பெயர்களில் சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுவதும் தடுக்கப்படும்.

மேலும் இ-கே.ஒய்.சி. பதிவுக்காக வாடிக்கையாளர்கள் கியாஸ் நிறுவன அலுவலகத்திற்கு நேரில் செல்லவேண்டிய அவசியம் இல்லை. அதற்கான செயலி மூலம் வீட்டில் இருந்தபடியே பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம்.

இ-கே.ஒய்.சி. புதுப்பித்தால் மட்டுமே கியாஸ் சிலிண்டர் முன்பதிவு ஆகும் என்பது தவறான தகவல். ஒருவர் தனது அங்க அடையாளங்களை தெரி விக்க விருப்பம் இல்லாத நிலையில் அவரை கட்டாயப்படுத்த முடியாது.

அதே நேரத்தில் ஒரே சிலிண்டரை 2 பேர் பயன்படுத்துவதை தடுக்கவே ஆவணங்களை பதிவு செய்வது கட்டாயமாக்கப் பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *