பாகிஸ்தானில் இந்து கோவில் இடிப்புக்கு இந்தியா கண்டனம்
1 min read
India condemns the demolition of a Hindu temple in Pakistan.
3.9.2026
பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில், 100 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான இந்து கோவில் ஒன்று இடிக்கப்பட்டுள்ளது. சுமார் 1,000 சதுர மீட்டர் நிலப்பரப்பைக் கொண்ட இந்தக் பழமையான கோவில், லாகூரிலிருந்து சுமார் 130 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நரோவால் மாவட்டத்தின் சிராஜ் கிராமத்தில் அமைந்திருந்தது.
மதரஸா கட்டுவதற்காக இந்த கோவில் ஆக்கிரமிக்கப்பட்டு இடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பழமையான இந்து கோவில் இடிக்கப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
“சிராஜ் கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமையான இந்து கோவில் இடிக்கப்பட்ட செய்தி மிகுந்த கவலையளிக்கிறது. சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தளம் மீதான இந்த வன்முறையை இந்தியா திட்டவட்டமாக கண்டிக்கிறது.
இந்த சம்பவம் குறித்து பாகிஸ்தான் அரசு வெளிப்படையான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இடிக்கப்பட்ட கோவிலை உடனடியாகச் சீரமைத்து, சிறுபான்மை மக்களின் பாதுகாப்பையும் அவர்களின் வழிபாட்டுத் தலங்களையும் உறுதி செய்ய வேண்டும்”
இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.