வெற்றிப் பயணம் திட்டத்தில் 5.9 கோடி பெண்கள் பயணம்; ஆண்களுக்கு டிக்கெட் கட்டண குறைப்பு
1 min read
5.9 crore women have traveled under the ‘Vetri Payanam’ scheme; ticket fares reduced for men.
8.10.2026
‘வெற்றிப் பயணம்’ திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, அக்டோபர் 2-ஆம் தேதி தொடங்கப்பட்டதில் இருந்து சுமார் 5.9 கோடி பெண்கள் தனிப் பயணங்களை மேற்கொண்டு பயனடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த தி.மு.க. ஆட்சியில் ‘மகளிர் விடியல் பயணம்’ என்ற பெயரில் அரசு டவுன் பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் த.வெ.க. தலைவர் விஜய் கடந்த தேர்தல் பிரசாரத்தின்போது, புறநகர் பஸ்களிலும் பெண்களுக்கு இலவச பயண அனுமதி வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.
பின்னர் த.வெ.க. ஆட்சியை பிடித்து விஜய் முதல்-அமைச்சரானார். தொடர்ந்து கடந்த 2-ந்தேதி காந்தி ஜெயந்தி விழாவையொட்டி, தமிழகத்தில் புறநகர் பஸ்களிலும் மகளிர் இலவசமாக பயணிக்கும் வகையில் ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தை முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். இது பெண்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
வெற்றிப் பயணம் திட்டம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் மாநகர, நகர்ப்புற Ordinary, Express, L.S.S., Deluxe, புறநகர் Ordinary மற்றும் மலைப்பகுதி Ordinary சேவைகளில் மகளிர், சிறுமியர் மற்றும் திருநர் பயணிகள் கட்டணமின்றி பயணம் செய்யலாம். இத்திட்டத்தில் பயனடைவதற்கு வருமான உச்சவரம்பு ஏதும் இல்லை. பயணங்களின் எண்ணிக்கைக்கும் வரம்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மகளிர் இலவசமாக பயணம் செய்யும் பஸ்களில் ஆண்களுக்கும் கட்டண சலுகை கிடைத்துள்ளது. நெல்லை-திருச்செந்தூர் இடையே முன்பு ரூ.50 கட்டணம் வசூலிக்கப்பட்டது. அது தற்போது ரூ.38 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று நெல்லை-தூத்துக்குடி இடையே இடைநில்லா எண்ட் டூ எண்ட் பஸ்களில் டிக்கெட் கட்டணம் ரூ.50 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. எக்ஸ்பிரஸ் பஸ்களில் ரூ.40-ம், சாதாரண பஸ்களில் ரூ.35 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
விழுப்புரம் கோட்டம் வேலூர் மண்டலம் சார்பில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் வெற்றிப்பயணம் திட்டத்தின் கீழ் இயக்கப்படும் 128 பஸ்கள் சாதாரண பஸ்களாக மாற்றப்பட்டுள்ளதால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வெற்றிப்பயணம் பஸ்களில் ஆண்களுக்கு 10 ரூபாயாக இருந்த டிக்கெட் கட்டணம் 7 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் களியக்காவிளை, மார்த்தாண்டம், கன்னியாகுமரி போன்ற பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வரும் பஸ்களில் டிக்கெட் கட்டணம் குறைந்துள்ளது. 65 பஸ்களில் ஆண்களுக்கும் டிக்கெட் கட்டணம் குறைந்துள்ளது.
திருச்சி கோட்டத்தில் 43 எக்ஸ்பிரஸ் பஸ்கள் சாதாரண கட் டண பஸ்களாக மாற்றப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து துறையூருக்கு வழக்கமாக எக்ஸ்பிரஸ் பஸ்சாக இயக்கும்போது ரூ.40 கட்டணம் வசூலிக்கப்பட்டது. ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தில் ஆண்களுக்கு ரூ.30 மட்டுமே வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில், வெற்றிப் பயணம் குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “பெண்களுக்கான இலவசப் பேருந்துப் பயணமான ‘வெற்றிப் பயணம்’ திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, அக்டோபர் 2-ஆம் தேதி தொடங்கப்பட்டதில் இருந்து சுமார் 5.9 கோடி பெண்கள் தனிப் பயணங்களை மேற்கொண்டு பயனடைந்துள்ளனர். அக்டோபர் 7-ந்தேதி ஒரே நாளில் சுமார் 88 லட்சம் பெண்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர். மேலும் டிக்கெட் கட்டண குறைப்பால் ஆண்களும் பயனடைந்து வருகின்றனர்” என்று தெரிவித்தார்.