புற்றுநோய் மருந்து விலையை குறைக்க மத்திய அரசு முடிவு
1 min read
Central Government decides to reduce cancer drug prices
8.10.2026
புற்றுநோய் மருந்துகளின் விலை அதிகமாக இருப்பது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், மருந்துகளின் வர்த்தக லாப வரம்பை 30 சதவீதமாக குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சில்லறை விற்பனையாளர்களுக்கு ரூ.2,700-க்கு வழங்கப்படும் ஒரு புற்றுநோய் மருந்து, நோயாளிகளிடம் 10 மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மருந்துகளின் விலைக்கும், நோயாளிகளிடம் வசூலிக்கப்படும் தொகைக்கும் இடையேயான இந்த மிகப்பெரிய விலை வித்தியாசம் குறித்து நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதுபோன்ற விலை நிர்ணயம், “படுகொலைக்கு சமம்” என்ற அளவுக்கு உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
இந்த நிலையில், புற்றுநோய் மருந்துகளின் விலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, அவற்றுக்கான வர்த்தக லாப வரம்பை 30 சதவீதமாக குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் சில புற்றுநோய் மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலை 70 சதவீதம் வரை குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மருந்துகளின் விலை குறைந்தால், புற்றுநோயாளிகளின் மாதாந்திர மருத்துவச் செலவும் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வழக்கு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.