விருதுநகரில் வன உயிரின வார விழா- மாணவர்களுக்கு ஆட்சியர் பரிசு
1 min read
Wildlife Week celebration in Virudhunagar: Collector presents prizes to students
8.10.2026
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று(08.10.2026) ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் சார்பில் வன உயிரின வார விழா- 2026 நிறைவு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஷரண்யா அறி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:-
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2 முதல் அக்டோபர் 8 வரை உள்ள நாட்கள் வன உயிரின வாரவிழாவாக வனத்துறையினரால் அனுசரிக்கப்படுகிறது. வனங்களில் வாழும் அனைத்து விலங்குகள் மற்றும் உயிரினங்களை பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வு அனைவரையும் சென்றடைவதே இதன் நோக்கமாகும்.
வனப்பாதுகாப்பு குறித்து சிறுவயதிலேயே அறிந்து ஈடுபடுவதால் அதன் முக்கியத்துவம் கூடுதலாக அறியலாம். வனப்பாதுகாப்பு என்பது வனத்துறையின் பணியாக மட்டும் இல்லாமல் அனைவரும் ஒருங்கிணைந்து ஒரு மக்கள் இயக்கமாக செயல்பட வேண்டும். இயற்கை உருவாக்கியுள்ள அனைத்து உயிரினங்களையும் பாதுகாப்பதற்கான பொறுப்பு நமக்கு இருக்கின்றது. அதுபோல, மனிதர்களும் இந்த பூமியில் வாழ்ந்தோம் சென்றோம் என்றில்லாமல் இந்த உலகிற்கு பயன்படும் வகையில் என்ன விட்டு சென்றோம் என்று திரும்பி பார்க்கும் பொழுது அது ஒரு ஏமாற்றமாக இருந்து விடக்கூடாது.
காற்று மற்றும் ஒலி மாசுபாட்டை குறைத்திடும் வகையில் நம்முடைய செயல்பாடு இருக்க வேண்டும். இருக்கின்ற மரங்கள் மற்றும் தாவரங்களை பாதுகாப்பதோடு புதிய மரங்களை நட வேண்டும். மரம் நடுவதோடு மட்டுமல்லாமல் வைத்த மரம் தன்னைத்தானே பாதுகாத்து கொள்கின்ற நிலைக்கு வரும் வரை நாம் அதை வளர்த்து பராமரிக்க வேண்டும். பள்ளிக் குழந்தைகளிடையே மரங்களை நடுதல் மற்றும் பராமரித்தல் குறித்து பெருமளவு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
அனுமதியின்றி வனப்பகுதிகளுக்கு செல்வதும், வனவிலங்குகளுக்கு இடையூறு செய்யும் வகையிலான செயல்பாடுகளையும் தவிர்க்க வேண்டும். இதுபோன்ற செயல்களை நாம் ஒவ்வொரு நாளும் கடைபிடிப்பதன் மூலம் இந்த உலகிற்கு ஒரு நேர்மறையான தாக்கத்தை விட்டுச்செல்ல முடியும். அதற்கான முயற்சிகளை அனைவரும் மாபெரும் இயக்கமாக இணைந்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பின்னர், வன உயிரின வார விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், துணை இயக்குநர் (ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்) ரவி மீனா, உதவி வன பாதுகாவலர்(ஸ்ரீவில்லிபுத்தூர்) ஞானப்பழம், வன சரக அலுவலர்(விருதுநகர்) சக்திவேல், வனத்துறை அலுவலர்கள், அரசு அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.