கேரளாவில் மதுபோதையில் கார் ஏற்றி 3 பேரை கொன்ற வாலிபர்
1 min read
Young man kills three people by running them over with his car while drunk in Kerala
12.10.2026
கேரளாவில் சொகுசு கார் மோதியதில் 2 இளம்பெண்கள் உள்பட 3 பேர் பலியாகினர். மதுபோதையில் விபத்தை ஏற்படுத்திய வாலிபர், எல்லாவற்றையும் என் அப்பா பார்த்துக் கொள்வார் என அங்குள்ளோரிடம் கூறினார்.
திரிக்காராவில் உள்ள நிறுவனம் ஒன்றில் தேவிகா, கோபிகா, இஜாஸ் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். நெடும்பச்சேரியில் நேற்று நள்ளிரவில் இவர்கள் 3 பேரும் டீக்கடைக்கு ஸ்கூட்டரில் சென்றனர். டீ குடித்துவிட்டு 3 பேரும் வாகனத்தில் திரும்பிக் கொண்டு இருந்த போது, பின்னால் அசுர வேகத்தில் வந்த மினி கூப்பர் கார் மோதியது.
விபத்தில் ஸ்கூட்டரில் சென்ற 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். தேவிகா, கோபிகா இருவரும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். உடன் வந்த இஜாஸ் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார். விபத்தை ஏற்படுத்திய மினி கூப்பர் காரில் இருந்த சுஹைல் சஜீவ் (19) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
தள்ளாட்டத்துடனே அவர் இருந்ததால், மதுபோதையில் விபத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என்ற சந்தேகம் எழ, போலீசார் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தன்னால் தான் விபத்து நிகழ்ந்தது என்று உணராமல், அனைத்தையும் என் அப்பா பார்த்துக் கொள்வார் என்று அங்குள்ளவர்களிடமும், போலீசாரிடமும் உளறிய படியே இருந்துள்ளார். சுஹைல் சஜீவ் ரத்தம், சிறுநீர் மாதிரிகள் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
விபத்து குறித்து போலீசார் கூறுகையில், ‘ காரில் மொத்தம் 3 பேர் இருந்துள்ளனர். 2 பேர் தப்பியோடி விட்டனர். விபத்து எப்படி நிகழ்ந்து என்ற வீடியோவும் கிடைத்துள்ளது. விபத்து வீடியோவை பார்க்கும் போது சுஹைல் சஜீவ், 200 கிமீ வேகத்தில் காரை ஓட்டி இருக்கலாம் என எண்ணுகிறோம். விசாரணை தொடர்கிறது’ என்று கூறினர்.