October 20, 2026

Seithi Saral

Tamil News Channel

தீபாவளி வரை கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம் இல்லை: அபிஜீத் திப்கே அறிவிப்பு

1 min read

No protests by the ‘Cockroach Janata Party’ until Diwali: Abhijit Dipke announces

20.10.2026

தீபாவளி வரை எந்த போராட்டங்களும் திட்டமிடப்படவில்லை என்று கரப்பான்பூச்சி கட்சி (சிஜேபி) தலைவர் அபிஜீத் திப்கே தெரிவித்தார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இந்தியா கூட்டணி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி மற்றும் மாணவர்கள் அமைப்பினர் தொடர்ந்து டெல்லியில் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தப்படும் என கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே அறிவித்தத் தொடர்ந்து, டெல்லி ஜந்தர் மந்தர் போராட்ட களத்தில் இருந்து நீக்கப்பட்டு, அங்கு இனி போராட அனுமதி கிடையாது என மத்திய உள்துறை அனுமதியுடன் டெல்லி போலீஸ் அறிவிப்பு வெளியிட்டது.

இதனை மீறி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர்கள் சவுரவ் தாஸ், அஷுதோஷ் ரங்கா, அஜிங்க்யா ஷிண்டே உள்ளிட்டோர் தடையை மீறி ஜந்தர் மந்தருக்குள் நுழைந்து இந்திய கொடியை காண்பித்தனர். இதன் காரணமாக கைது செய்யப்பட்ட அவர்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்தசூழலில், இன்றைய டெல்லி தசரா விழாவில், ராவணனின் உருவ பொம்மையுடன் சேர்த்து 30 அடி உயரம் கொண்ட கரப்பான் பூச்சி உருவ பொம்மையையும் எரிக்கப்பட இருக்கிறது. இதற்கு கருத்து தெரிவித்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே, இலவசமாக எங்களை பிரபலபடுத்துவதற்கு நன்றி என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் சூழலில், அதுவரை எந்த போராட்டமும் இல்லை என்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜீத் திப்கே அறிவித்துள்ளார்.

தனது ஆதரவாளர்களை “கரப்பான் பூச்சிகள்” என்று குறிப்பிட்டதோடு, பண்டிகைக் காலத்தில் தங்கள் குடும்பத்தினருடனும், அன்புக்குரியவர்களுடனும் நேரத்தை செலவிடுமாறு அவர்களை வலியுறுத்தினார்.

கடந்த 10-12 நாட்களாக இந்த இயக்கத்தில் ஈடுபட்டுள்ளவர்களும் அவர்களது குடும்பத்தினரும் குறிப்பிடத்தக்க சிரமங்களைச் சந்தித்துள்ளதாக கூறிய திப்கே, சவுரப் தாஸ் மற்றும் அஷுதோஷ் ஆகியோரை குறிப்பிட்டு, அவர்கள் இருவரும் சிறையில் இருந்தாலும், இயக்கத்தின் உறுப்பினர்கள் அச்சுறுத்தப்பட மாட்டார்கள் என்று கூறினார்.

இந்த இயக்கத்தில் ஈடுபட்டுள்ள பல தொண்டர்கள் தெருக்களில் தாக்கப்பட்டதாகவும், காவலில் இருந்தபோது துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும் அபிஜீத் திப்கே கூறினார். இந்த நிலைமைகள் ஆர்வலர்களின் குடும்பங்களையும் பாதிக்கின்றன என்றும் அவர் மேலும் கூறினார். இது பண்டிகைக் காலம் என்பதால், அவர்களது குடும்பத்தினர் கவலைப்படுவார்கள் என்றும், எனவே மக்கள் தங்கள் குடும்பத்தினருடனும் அன்புக்குரியவர்களுடனும் சில நாட்களைச் செலவிடுமாறும் திப்கே வேண்டுகோள் விடுத்தார்.

இதுதொடர்பான வீடியோவில் அபிஜீத் திப்கே கூறுகையில், “நாம் வெறுப்புக்கு எதிராகப் போராடுகிறோம். அந்த வெறுப்பு நமக்குள்ளே நுழையாமல் இருப்பதையும் நாம் உறுதி செய்ய வேண்டும். நம்மை வெறுப்பவர்களை போல நாம் ஆகிவிடக் கூடாது. ஒருவருக்கொருவர் காட்டும் அன்பு, கருணை மற்றும் இரக்கமே நமது மிகப்பெரிய பலம்” என்று கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *