தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
1 min read
Cauvery Management Authority orders the release of 3,000 cubic feet of water per second to Tamil Nadu
23.10.2026
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே காவிரி நீர் பகிர்வு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையம் அவ்வப்போது கூடி வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது. காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நீர முழுமையாக வழங்கப்படாத நிலையில் தமிழ்நாடு அரசு இதுகுறித்து சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.
தற்போது தமிழ்நாட்டுக்கு 15 நாட்கள் என்ற கணக்கீட்டில் காவிரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு காவிரி ஒழுங்காற்றுக்குழுவும், மேலாண்மை ஆணையமும் கூடி, தண்ணீர் திறப்பு பற்றி விவாதிக்கின்றன. இந்த நிலையில் ஆணையத்தின் 60-வது கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. டெல்லியில் உள்ள ஆணையத்தின் அலுவலகத்தில் ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு 4 மாநிலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
இதன்படி, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களின் அதிகாரிகள் பங்கேற்று இருந்தனர்.இந்தக்கூட்டத்தில் காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரைத்தப்படி அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் வீதம் தமிழ்நாட்டிற்கு திறந்துவிட வேண்டும் என்று கர்நாடகாவிற்கு மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் அடுத்த கூட்டம் வரும் நவம்பர் 6 ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.