வாசுதேவநல்லூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி குழந்தை பலி
1 min read
Child killed after getting caught under lorry wheel near Vasudevanallur
23.10.2026
மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்தில் சிக்கி கீழே விழுந்த குழந்தை, லாரி சக்கரத்தில் சிக்கி பெற்றோர் கண் முன்னே பரிதாபமாக உயிரிழந்தது.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் கடையநல்லூர் தாலுகா அலுவலகத்தில் நில அளவையராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் அத்விக் (வயது 3) உள்பட 2 குழந்தைகள் உள்ளனர். தற்போது பாலசுப்பிரமணியன் தனது குடும்பத்தினருடன் கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தில் தங்கியுள்ளார். இவர் நேற்று பகல் 11 மணியளவில் மனைவி மற்றும் 2 குழந்தைகளையும் மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு அருகிலுள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டார்.
மதுரை-தென்காசி தேசிய சாலையில் கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் சிக்னல் அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் சாலையின் மறுபுறம் கீழே விழுந்த அத்விக், தென்காசியை நோக்கி சென்ற லாரி சக்கரத்தில் சிக்கினான். இந்த கோர விபத்தில் பெற்றோர் கண்முன்னே அத்விக் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபாக உயிரிழந்தான்.
பாலசுப்பிரமணியன், அவரது மனைவி, மற்றொரு குழந்தை ஆகியோர் லேசான காயங்களுடன் தப்பினர். மகனின் உடலை கண்டு பெற்றோர் கதறி அழுதனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கடையநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அத்விக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடையநல்லூர் பகுதியில் இந்த விபத்தை போல் நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து மேலும் 2 சம்பவங்களில் மோட்டார் சைக்கிள்களில் சென்றவர்கள் கீழே விழுந்து லேசான காயங்களுடன் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.