அதிமுக எம்எல்ஏக்கள் 5 பேர் தென்மாவட்டங்களில் சுற்றுலா ரகசிய ஆலோசனை
1 min read
Five AIADMK MLAs hold secret consultations during a trip to the southern districts
30.10.2026
தமிழக அரசியல் களத்தில் அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வரும் நிலையில், அதிமுகவை சேர்ந்த 5 அதிமுக எம்எல்ஏ-க்களின் தென்மாவட்ட சுற்றுலா தற்போது பெரும் புயலைக் கிளப்பியிருக்கிறது.
இதில் பழனி தொகுதி எம்எல்ஏ ரவி மனோகரன், அந்தியூர் தொகுதி எம்எல்ஏ ஹரி பாஸ்கர், பண்ருட்டி தொகுதி எம்எல்ஏ மோகன், சங்கராபுரம் தொகுதி எம்எல்ஏ ராகேஷ் மற்றும் சங்கரன்கோவில் தொகுதி எம்எல்ஏ திலீபன் ஜெயசங்கர் ஆகிய ஐந்து பேரும் இன்று காலை ஒன்றாக சங்கரநாராயணர் திருக்கோவிலுக்கு வருகை தந்து சிறப்பு வழிபாடுகளை நடத்தியுள்ளனர்.
இவர்கள் கோவில் தரிசனம் செய்ததை விட, இதற்கு முன்பாக நடந்த சம்பவங்கள் தான் அதிமுக தலைமையையே அதிர வைத்திருக்கிறது. கடந்த 3 நாட்களுக்கும் மேலாக தென்காசி மாவட்ட பகுதிகளில் முகாமிட்டிருக்கும் இவர்கள் குற்றாலத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் இந்த ஐந்து எம்எல்ஏ-க்களும் கட்சித் தலைமைக்குத் தெரியாமல் ரகசிய ஆலோசனை நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாராபுரம், மதுராந்தகம் இரு தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழகம் வெற்றியடைந்ததை தொடர்ந்து நடிகர் விஜய் தலைமையிலான ‘தமிழக வெற்றிக் கழகம்’ மாநிலம் முழுவதும் தீவிர அரசியல் களப்பணிகளில் இறங்கியுள்ளது.
இந்நிலையில், அதிமுக தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் ஒரு சில சட்டமன்ற உறுப்பினர்களும், தவெக-விற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க முடிவு செய்திருப்பதாகவும், விரைவில் தவெக-வில் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது இப்படிப்பட்ட சமயத்தில் இந்த ஐந்து அதிமுக எம்எல்ஏக்களின் இந்த சந்திப்பு அதிமுக வட்டாரங்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது
இருப்பினும், இது வழக்கமான ஆன்மீகச் சுற்றுப்பயணம் தானா அல்லது அதிமுகவில் புதிய பிளவை உண்டாக்கும் அரசியல் நகர்வா என்பது குறித்து சம்பந்தப்பட்ட எம்எல்ஏ-க்கள் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் வரவில்லை.
இருந்தபோதிலும், 5 சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக முகாமிட்டு ஒன்றாக தரிசனம் செய்திருப்பது அதிமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.