ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரி உமர் அப்துல்லாவுக்கு எதிராக 24 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி
1 min read
24 MLAs raise war flag against Jammu and Kashmir Chief Minister Omar Abdullah
31.10.2026
ஜம்மு காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லாவுக்கு எதிராக அவரது சொந்தக் கட்சியான தேசிய மாநாட்டுக் கட்சியைச் சேர்ந்த 24 எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி தெரிவித்து போர்க்கொடி தூக்கியுள்ளனர். முதல்-மந்திரியின் ஆலோசகர் மற்றும் சில அமைச்சர்களை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் உமர் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டுக் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சமீபத்தில் அவரது அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் 4 புதிய அமைச்சர்கள் சேர்க்கப்பட்டனர். இதனால் கட்சியின் மூத்த எம்.எல்.ஏ.க்கள் சிலர் அதிருப்தி அடைந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இன்று முன்தினம் ஸ்ரீநகரில் உள்ள எம்.எல்.ஏ. கெய்சர் ஜம்ஷித் லோனின் இல்லத்தில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இதில் 18 எம்.எல்.ஏ.க்கள் நேரடியாகப் பங்கேற்றனர். மேலும் 6 பேர் காணொலி வாயிலாகக் கலந்து கொண்டு தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். இதன் மூலம் மொத்தம் 24 எம்.எல்.ஏ.க்கள் இந்த அணியில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல்-மந்திரி உமர் அப்துல்லாவின் ஆலோசகர் நசீர் அஸ்லம் வானியைப் பதவியில் இருந்து நீக்க வேண்டும், துணை முதல்-மந்திரி சுரிந்தர் சவுத்ரியைப் பதவியில் இருந்து அகற்ற வேண்டும், 2 ஆண்டுகள் பதவியில் இருக்கும் அமைச்சர்களை மாற்ற வேண்டும், அமைச்சரவையை முழுமையாக மறுசீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 4 முக்கிய கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்துள்ளனர். மேலும், கட்சியின் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும் என்றும், ஆட்சி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து அதிருப்தி எம்.எல்.ஏ. கூறுகையில், “எங்களது கோரிக்கைகளை முதல்-மந்திரியிடம் தெரிவிக்க விரும்புகிறோம். நாங்கள் கட்சிக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால், முன்பு இருந்ததைப் போலவே தொடர்ந்து செயல்பட முடியாது. கட்சிக்கும் அரசுக்கும் நன்மை பயக்கும் வகையில் அவர் மாற்றங்களைச் செய்ய வேண்டும்” என்றார்.
தேசிய மாநாட்டுக் கட்சியில் 41 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். 90 உறுப்பினர்களைக் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் காங்கிரசின் 6 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் சிறிய கட்சிகள், சுயேச்சைகளின் ஆதரவுடன் உமர் அப்துல்லா ஆட்சி நடத்தி வருகிறார். இதற்கிடையே, ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதி எம்.பி.யான ஆகா ருஹுல்லாவும் தேசிய மாநாட்டுக் கட்சியில் இருந்து விலகுவதுடன், தனது எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார். இதனால் தேசிய மாநாட்டுக் கட்சிக்குள் அதிருப்தி அதிகரித்துள்ள நிலையில், உமர் அப்துல்லா அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.