நகைகளை நேர்மையுடன் ஒப்படைத்த முதியவருக்கு தென்காசி ஆட்சியர் பாராட்டு
1 min read
Tenkasi Collector commends elderly man for honestly returning jewelry
11/11/2026
தென்காசி மாவட்டம், அரியப்பபுரம் ஊராட்சி தெற்கு மாலைசூடிபட்டியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் சாலையில் தவறவிட்ட 245 கிராம் தங்க நகைகளை, கடையம் பெரும்பத்தூர் ஊராட்சி மேட்டூர் கிராமத்தில் வசிக்கும் பாப்பையா என்பவர் கண்டெடுத்தார்.
அந்தத் தங்க நகைகளைத் தன்னிடம் வைத்துக் கொள்ளாமல், நேர்மையுடன் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
பாப்பையாவின் நேர்மையையும், நாணயத்தையும் பாராட்டும் வகையில், இன்று (11.11.2026) தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் மோனிகா ராணா, பாப்பையாவுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டி கௌரவித்தார்.
சாலையில் கிடைத்த விலைமதிப்பற்ற தங்க நகைகளை உரியவரிடம் சேர்க்கும் நோக்கில் காவல் நிலையத்தில் ஒப்படைத்த பாப்பையாவின் நேர்மையான செயல் பொதுமக்களிடையே பாராட்டுகளைப் பெற்று வருகிறது.