November 24, 2026

Seithi Saral

Tamil News Channel

கோரைய்பள்ளம் கிராமத்தில் இயற்கை இடுபொருட்கள் குறித்து பயிற்சி

1 min read

Training on natural inputs in Koraippallam village

23.11.2026
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள கோரைய்பள்ளம் கிராமத்தில் விவசாயிகளிடையே இயற்கை வேளாண்மை முறைகளை ஊக்குவிக்கும் நோக்கில், பரமக்குடி மண்டல ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில் இயற்கை மிளகாய் சாகுபடி குறித்த பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இப்பயிற்சயில் கோரைய்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வி.ராமரிடம் இயற்கை மிளகாய் சாகுபடி முறைகள் மற்றும் அதன் பயன்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப் பட்டது.

பரமக்குடி மண்டல ஆராய்ச்சி நிலையத்தின் தோட்டக்கலை நிபுணர் டாக்டர் பி. பாலசுப்பிரமணியன் பேசுகையில், மிளகாய் சாகுபடியில் விதை நேர்த்தியின் முக்கியத்துவம், இயற்கை நுண்ணுயிர் உரங்களின் பயன்பாடு, மண் வள மேலாண்மை மற்றும் பூச்சி, நோய் கட்டுப்பாட்டு முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விரிவாக விளக்கினார்.
மிளகாய் பயிரில் பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த வேப்ப எண்ணெய் மற்றும் பிற இயற்கை இடுபொருட்களைப் பயன்படுத்தும் முறைகள், மண்ணின் வளத்தைப் பாதுகாத்தல் விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப் பட்டது. நிகழ்ச்சியில் பரமக்குடி மண்டல ஆராய்ச்சி நிலையத்தின் வேளாண்மையியல் இணைப் பேராசிரியர்கள் டாக்டர் எஸ். வள்ளல் கண்ணன்,டாக்டர் ஆர். ஐசக் மானுவேல் ஆகியோரும் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு வேளாண் தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கினர்.

தொடர்ந்து, கமுதி நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் பயிற்சியில் கலந்து கொண்டு இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றைப் பயன்படுத்தி 3 ஜி இயற்கைச் சாறு தயாரிக்கும் முறையை விவசாயிகளுக்கு நேரடியாகச் செயல்விளக்கம் செய்து காட்டினர். இந்த இயற்கைச் சாற்றைத் தயாரிக்கும் முறை, அதன் பயன்பாடு மற்றும் பயிர்ப் பாதுகாப்பில் அதன் பங்கு குறித்தும் விளக்கினர். ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள், கல்லூரி மாணவர்கள் மற்றும் விவசாயிகள் இடையிலான தொழில்நுட்பப் பரிமாற்றத்திற்கும் சிறந்த வாய்ப்பாக அமைந்து இருந்தது குறிப்பிடத் தக்கது.

குணாளன்,நிருபர்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *