November 25, 2026

Seithi Saral

Tamil News Channel

நெல்லையிலிருந்து திருப்பரங்குன்றத்திற்கு புறப்பட்ட நயினார் நாகேந்திரன் கைது

1 min read

Nainar Nagendran, who set out from Nellai for Tirupparankundram, has been arrested.

24/11/2026
நெல்லையிலிருந்து திருப்பரங்குன்றம் நோக்கி புறப்பட்ட பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவரது ஆதரவாளர்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருக்கார்த்திகை தீபத்திருநாள் இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படும் நிலையில் கோவில்களிலும், வீடுகளிலும் தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கம். மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என பல இந்து அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்திய வண்ணம் உள்ளன.

இதுதொடர்பாக இந்து தமிழர் கட்சி நிறுவனர் ராம.ரவிக்குமார் தொடர்ந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என கடந்த ஆண்டு உத்தரவிட்டார். ஆனால், இந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை. இதை எதிர்த்த தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தும், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவை உறுதி செய்தும் மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச் தீர்ப்பு அளித்தது.

மதுரை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு தடை விதிக்கக்கோரி தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் முறையிடப்பட்டது. இது தொடர்பாக நடந்த விசாரணைக்கு பின்னர் பல்வேறு நிபந்தனைகளுடன் இந்த ஆண்டில் மட்டும் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் திருக்கார்த்திகை தீபம் (அதாவது இன்று) ஏற்றலாம் என்று சுப்ரீம்கோர்ட்டு அனுமதி வழங்கியது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சீராய்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விரைந்து விசாரிக்கக்கோரி தமிழ்நாடு அரசின் சார்பில் முறையிடப்படும் என நேற்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த விவகாரத்தை விசாரித்த அமர்வு நேற்று இடம்பெறவில்லை. எனவே தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன் முறையிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த அமர்விலும் முறையிடப்படவில்லை. இதனால் மறுஆய்வு மனு மீது எவ்வித விசாரணையும் நடைபெறவில்லை. குருநானக் ஜெயந்தியையொட்டி சுப்ரீம் கோர்ட்டுக்கு இன்று விடுமுறை என்பதால் இந்த மனு மீது இன்றும் விசாரணை நடைபெற வாய்ப்பு இல்லை. இதனால், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு என்ன செய்யப்போகிறது? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக எழுந்துள்ள சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை தொடர்ந்து, மதுரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், கட்சி நிர்வாகிகளுடன் திருப்பரங்குன்றம் செல்ல இருந்த நிலையில் வீட்டு காவலில் வைக்கப்பட்டார். நெல்லையில் பெருமாள்புரம் காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் நயினார் நாகேந்திரன் இல்லத்தில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் நெல்லையிலிருந்து திருப்பரங்குன்றம் நோக்கி புறப்பட்ட பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவரது ஆதரவாளர்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக நெல்லையில் இருந்து திருப்பரங்குன்றம் செல்லும் வழியில் தச்சநல்லூர் சோதனை சாவடியில் நெல்லை மாநகர போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். அவருடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் தற்போது நயினார் நாகேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *