10 ஆண்டுகளில் ரூ.18.08 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்த வங்கிகள்
1 min read
Banks wrote off loans worth Rs 18.08 lakh crore over 10 years
25.11.2026
இந்தியாவில் உள்ள வங்கிகள் கடந்த 10 ஆண்டுகளில் மொத்தம் ரூ.18.08 லட்சம் கோடி மதிப்பிலான கடன்களை தள்ளுபடி செய்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன. இதில் பொதுத்துறை வங்கிகளின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. பெரிய அளவிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2025-26-ம் நிதியாண்டில் மட்டும் வங்கிகளின் கடன் தள்ளுபடி 8.2 சதவீதம் குறைந்து ரூ.1.44 லட்சம் கோடியாக உள்ளது. இருப்பினும், கடந்த 10 ஆண்டுகளில் வங்கிகளின் இருப்புநிலைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட வாராக்கடன்களின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.18.08 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
அனைத்து வணிக வங்கிகளின் மொத்த கடன் தள்ளுபடியில் சுமார் 65 சதவீதத்தை முதல் 10 வங்கிகள் மட்டுமே செய்துள்ளன. அதாவது, இந்த 10 வங்கிகளும் இணைந்து ரூ.11.73 லட்சம் கோடி மதிப்பிலான கடன்களை தள்ளுபடி செய்துள்ளன. இதில் பொதுத்துறை வங்கிகளின் பங்களிப்பே அதிகமாக உள்ளது.
இந்த அளவுக்கு அதிகமான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது, வங்கிகளின் கடன் வழங்கும் நடைமுறைகள் மற்றும் பொதுமக்களின் பணத்தை மீட்பதில் உள்ள பொறுப்புக்கூறல் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
வாராக்கடன்களின் அளவைக் குறைப்பதற்காக வங்கிகள் கடன் தள்ளுபடி நடைமுறையைப் பின்பற்றுகின்றன. இருப்பினும், இந்த நடைமுறையால் பெரிய அளவில் கடன் வாங்கியவர்களுக்கே அதிக பலன் கிடைப்பதாக வாடிக்கையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சிறிய அளவிலான கடன்கள் அரிதாகவே தள்ளுபடி செய்யப்படுவதாகவும், தள்ளுபடி செய்யப்படும் கடன்களில் பெரும்பகுதி பெரிய தொகையிலான கடன்களாகவே இருப்பதாகவும் ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் தெரிவித்துள்ளார்.