June 14, 2024

Seithi Saral

Tamil News Channel

இலக்கிய நிழலில் இளைப்பாறலாம்! -(7) காளமேகப்புலவரின் கிண்டலான பாடல்கள்/ முத்துநாயகம்

1 min read

Ilakkiyam/ 7/ Kalamega pulaver / Muthunayagam

4-9-2020

நாவலர் நெடுஞ்செழியன் நல்ல நகைச்சுவைப் பேச்சாளர்.

பேசும்பொருளாக, அவர் எதை எடுத்துக் கொண்டாலும், கேட்பவர்களுக்கு கொஞ்சமும் அலுப்பு ஏற்படாமல் குலுங்கக், குலுங்கச் சிரிக்கும்படி பேசக்கூடியவர்.

1970 களில் என நினைவு!
அவர் தமிழக அமைச்சராக இருந்த நேரம். தற்போதைய தென்காசி மாவட்டத்தில் இருக்கும், செங்கோட்டை நகரில் அரசு விழா ஒன்றில் பங்கேற்றார்.

நகரசபைத் தலைவராக இருந்த வர்த்தகரும் செல்வந்தருமான ஒருவர், விழாவிற்கு தலைமை தாங்கினார்.

தலைமை உரையாற்றத் தடுமாறிய அந்தச் செல்வந்தர், ஒருசில வார்த்தைகள் மட்டும் உதறலோடு பேசிவிட்டு அமர்ந்துவிட்டார்.

அதன் பிறகு அமைச்சர் நெடுஞ்செழியன் எழுந்தார். நகைச்சுவை ததும்பத் தொடங்கியது!

சிறிதுநேரம் பேசிக்கொண்டே போனவர், பேச்சுக்கு இடையே பொருத்தமான ஓர் இடத்தில் (அது நினைவில்லை) கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டார்…

“ஏதோ காசு இருக்கிறது என்று சொல்லி சிலரை கட்சியில் இழுத்து வந்து உட்கார வைக்கிறோம். மேடையில் ஏறி நான்கு வார்த்தை பேசு என்று சொன்னால், வைக்கோற் படப்பில் இருந்து, வைக்கோலை உருவுகிற மாதிரி, வாயில் இருந்து வார்த்தைகளை உருவ வேண்டியது இருக்கிறது..!” என்றார்.

ஒரே சிரிப்பலை! மேடைக்கு முன் இருந்தவர்களும் சிரித்தனர். மேடையில் இருந்தவர்களும் சிரித்தனர். ஏன்? தலைமை வகித்த செல்வந்தரும், தன்னைதான் என்பதைக்கூட மறந்து வாய்விட்டுச் சிரித்தார்.

இவ்வாறு சிரிக்கிற உணர்வு எல்லோருக்கும் இருந்தாலும், சிரிக்க வைக்கிற திறன் சிலருக்கு மட்டுமே இருக்கிறது!

அத்தகையத் திறன்கொண்ட ஒரு புலவர், நமது தமிழ் இலக்கியத்தில் பேசப்படுகிறார்.
அவர்தான், காளமேகம்.
குறும்புக்காரப் புலவர். வசைபாடுவதிலும் வல்லவர்!

ஒருநாள் அவர் நாகப்பட்டினத்தில் நடந்துபோய்க் கொண்டிருந்தார்.

நீண்ட தூரம் நடந்ததால், புலவருக்கு களைப்பு. பசியும் வயிற்றைப் பிசைந்தது.

கட்டுச்சோறு இருந்தால், கவலை இருந்திருக்காது.
குளங், குட்டைகள் அருகே அமர்ந்து சாப்பிட்டுவிட்டு, மரத்தடியில் துண்டைவிரித்து தூங்கிவிட்டு போயிருக்கலாம்!

காளமேகப்புலவரிடம் அதற்கு வழி இல்லை. சோர்வாக நடந்துபோனார். சிறிது தூரத்தில், ‘காத்தான் வருணகுலாதித்தன் சத்திரம்’ ஒன்று இருந்தது.

புலவர் உணவுக்காக சத்திரத்தின், உள்ளே நுழைந்தார். பந்தியில் அமர்ந்தார். சிறிதுநேரம் பொறுமையாக இருந்தார். இருந்தும் உணவு பரிமாறப்படவில்லை. காத்திருந்து, காத்திருந்து காதுகளும் அடைத்தும் போயின!

‘உணவு தயாராகுகிறது… தயாராகிவிட்டது… வெந்துவிட்டது…வந்துவிட்டது!’ என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள். புலவர் நொந்துவிட்டார்.

நெடுநேரத்திற்கு பின்னரே சாப்பாடு என்று ஏதோ ஒன்றையும் அவருக்கு போட்டார்கள்.

விடுவாரா அவர்? பொறுமை இழந்தார். சரியான வேளையில் சாப்பாடு போடாத சத்திரத்துக்காரர்களை, சாடை மாடையாகச் சாடினார்.

“அலைகள் எழுந்து ஒலி எழுப்பும் கடல் சூழ்ந்த நாகப்பட்டினத்தில் இருக்கும், இந்த காத்தான் சத்திரத்தில், பொழுது சாய்ந்த வேளையில்தான் (அய்யா) அரிசி வந்துசேரும்.

அரிசியைத் தீட்டி, இவர்கள் உலையில் போடுகிறபோது இரவாகிவிடும்.

சாப்பிட வந்த இரவலர்களுக்கு இலையில் ஒரு அகப்பை சோறுபோடும் நேரத்தில், வானத்தில் விடிவெள்ளியே தோன்றிவிடும்” (போங்கய்யா…! நீங்களும் உங்கள் சத்திரமும்) என்று அறம் பாடிவிட்டு துண்டை வீசி, தோளில் போட்டுக்கொண்டு போய்விட்டார், புலவர்!

ஒருமுறை அவர், திருவரங்கம் போய் இருந்தார்.

அக்காலங்களில் வழிப்போக்கர்களாய்ச் செல்கிறவர்களுக்கு, சத்திரம், சாவடிகளில் மட்டும் அல்ல, சில செல்வந்தர்களின் இல்லங்களிலும், தாராள மனம்படைத்தவர்களின் வீடுகளிலும், படியளப்பது உண்டு!

அன்று, அவ்வாறு ஒரு வீட்டில் காளமேகப் புலவருக்கு விருந்து கிடைத்தது.

புலவரின் பெருமையை அறிந்த அந்த வீட்டு அம்மையார், அவசர அவசரமாக சமையல் செய்து, ஒரு குழம்பையும் வைத்து வியர்வை சிந்த, விருந்தும் பரிமாறினார்.

பாவம், அந்த அம்மா! அவசரமாக ஆக்கியபோது, குழம்பில் கொஞ்சம் கூடுதலாக தண்ணீர் ஊற்றிவிட்டார். அரிசியை களையும் போது ஒருசில கற்கள், அவர் கண்களில் படாமல் தப்பிவிட்டன!

பசிக்கு கிடைத்த சோறு அல்லவா?வயிராற உண்டுவிட்டு, ‘அம்மையே, நீ வாழ்க!’ என்று வாயார வாழ்திவிட்டுதானே, புலவர் போக வேண்டும்! அவர் அவ்வாறு செய்யவில்லை!
அவர்தான் குறும்புக்காரர் ஆயிற்றே!

எப்படிச் சொல்கிறார்? இங்கே பாருங்கள்…

“பொங்கிவரும் காவிரி ஆற்றைத் தடுத்து நிறுத்தி, கீரைச் சாறுயென வெள்ளமாக என் இலையில் கொட்டினாள்!

அது மட்டுமா? அந்த கீரைச் சாற்றில் போட்ட புளிகூட கொதிக்கவில்லை. அதனுடன் (புண்ணியவதி) நல்ல கற்களோடு சோற்றையும் சிறிதே கலந்து, இலையில் போட்டுவிட்டாள்!

இப்படி எனக்கு உணவளித்த அந்த அம்மையாரை, நான் ஒருநாளும் மறக்கவே மாட்டேன். அப்படி நான் மறந்தாலும் என் மனம் மறக்குமென்று நினைக்கிறீர்களோ? ம்..கூம்…! அதனை ஒருபோதும் மறவாது!”

இவ்வாறு உணவின் சுவைக் குறைவை, நகைச்சுவை குறையாமல் இடித்துரைத்துப் போனார், அந்தக் குறும்புக்காரப் புலவர்!

இதோ காளமேகத்தின் பாடல்கள்…

(1)நீச்சாற் பெருத்திடுங் காவேரி யாற்றை நிலைநிறுத்திச்
சாய்ச்சா ளிலைக்கறிச் சாற்றையெல் லாமது தானுமன்றிக்
காய்ச்சாப் புளியும்நற் கல்லுடன் சோறும் கலந்துவைத்த
ஆச்சாளை யான்மறவேன் மறந்தான் மன மாற்றிடுமோ?

(2)கத்துக்கடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்
அத்தமிக்கும் போதி லரிசிவரும்- குத்தி
உலையிலிட வூரடங்கு மோரகப்பை யன்னம்
இலையிலிட வெள்ளி எழும்.

                  க.முத்துநாயகம்,
                லாலாக்குடியிருப்பு.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.