திருக்கார்த்திகை விரதம்
1 min read
Thirukarthika fasting
28/11/2020
கார்த்திகை நட்சத்திரம் முருகனுக்கு மிகவும் உகந்தது. சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து கிளம்பிய தீபொறி சரவணப் பொய்கையை சேர்ந்ததும் அங்கு ஆறு அற்புத உருவங்களில் முருகப்பெருமான் அவதரித்தார். அவர்களை வளர்த்தது கார்த்திகை பெண்கள். தன்னை வளர்த்த கார்த்திகை பெண்களுக்கு நட்சத்திர அந்தஸ்து வழங்கினார். அந்த நட்சத்திரத்தில் விரதம் இருந்தால் முருகனின் பரிபூரண அருளை பெறலாம். குறிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
கார்த்திகை மாதம் வரும் கார்த்திகை நட்சத்திரமே திருக்கார்த்திகை. இந்தநாள் சிவபெருமானுக்கும் மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது. அன்றைய தினம்தான் திருவண்ணாமலையில் மகா விஷ்ணுவுக்கும், பிரம்மாவுக்கும் பெரும் நெருப்பாக காட்சி கொடுத்தார். எனவே திருக்கார்த்திகை அன்று விரதம் இருப்பதால் சிவபெருமான் மற்றும் முருகப்பெருமானின் அருளை ஒருங்கே பெறலாம்.
திருக்கார்த்திகை அன்று அதிகாலையில் குளித்து விரதத்தை தொடங்க வேண்டும். தங்கள் வசதிக்கு தகுந்தபடி மூன்று வேளையும் உணவு உண்ணாமலோ அல்லது பழங்களை மட்டும் உண்டோ விரதம் இருக்கலாம். அன்று இரவு வீட்டில் கார்த்திகை தீபம் ஏற்றவேண்டும். அன்று வீட்டில் பச்சரிசி மாவு இடித்து அதில் வெல்லம் கலந்து அதை படைத்து சாமி கும்பிடலாம். மேலும் அவல்-பொரியும் வைத்தும் வணங்கலாம். அன்று இரவு மாவுப்பொருளை சாப்பிட்டு விரதத்தை முடிக்கலாம்.
திருக்கார்த்திகை அன்று திருவண்ணாமலையில் விழா சிறப்பாக நடைபெறும். அன்று அங்கு சென்று தரிப்பது நல்லது. முடியாதவர்கள் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று சிவபெருமான் மற்றும் முருகனை தரிசனம் செய்யுங்கள்.